25 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்! அதுவும் சுகப்பிரசவம்!

25 வயதுடைய பெண் ஒருவர் சுகப்பிரசவத்தில் ஒரே முறையில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


ஈராக்கின் கிழக்கே உள்ள தியாலி மாகாணத்தைச் சேர்ந்தவர் யூசுப் பாதல். இவரது 25 வயது உடைய மனைவி கருவுற்றார். அவரது வயிறு மிகவும் பெரியதாக காணப்பட்டதால் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

 

அப்போது வயிற்றில் ஏழு குழந்தைகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அண்மையில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அறுவை சிகிச்சையா அல்லது சுகப்பிரசவமோ என்று மருத்துவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பெண் வதவதவென குழந்தைகளை சுகப்பிரசவம் முறையிலேயே பெற்றார்.

 

மொத்தம் ஏழு குழந்தைகள் பிறந்தன. அதில் ஆறு பெண் குழந்தைகள், ஒன்று ஆண் குழந்தை. அனைத்து குழந்தைகளும் துருதுருவென பூரண உடல் நலத்துடன் உள்ளன.

 

குழந்தைகள் வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அந்தப் பெண் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஈராக் நாட்டில் சுகப்பிரசவத்தில் ஒரே முறையில் ஒரு பெண் ஏழு குழந்தைகளை பெற்றெடுப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

 

இதில் வினோதமான இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. தனது குடும்பத்தை பெருக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை எனக் கூறியுள்ள யூசுப், தற்போது 7 குழந்தைகள் தனக்கு பிறந்து இருப்பதை எண்ணி பூரிப்பு அடைந்துள்ளார்.