வெட்டப்பட்ட மரத்திற்கு மாலை..! கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! நெகிழ வைத்த குடியாத்தம் மக்கள்! மனதை உருக வைக்கும் காரணம்!

நள்ளிரவில் மரம் மர்ம நபர்களால் வெட்டப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் மரக்கன்றுகளை நட்ட சம்பவமானது குடியாத்தத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குடியாத்தம் பகுதியில் பாக்கம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில், 20 வருடங்களாக மிகப்பெரிய வேலாண் மரம் அமைந்திருந்தது. நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களும், பொது மக்களும் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுப்பர். காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடும் போதும் அந்த மரத்தின் அடியில் நின்றுக்கொண்டு ஈடுபடுவர். அப்பகுதியின் அடையாளமாகவே அந்த வேலாண் மரம் மாறிவிட்டது.

திடீரென்று அந்த மரம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை மரம் வெட்டப்பட்டு பாதியாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை ஏற்றி மரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், பாமகவை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அதிமுகவை சேர்ந்த பாஸ்கர்,டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆகியோரின் தலைமையில் மரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. மேலும் 20 வருடங்களாக உழைத்து வரும் மரத்திற்கு நன்றி செலுத்தும் வகையில், 100 மரக்கன்றுகளை சுற்றுவட்டாரத்தில் அப்பகுதி மக்கள் நட்டனர்.

இந்த சம்பவத்தை அறிந்த குடியாத்தம் டவுன் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதும், 100 மரக்கன்றுகளை மட்டும் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.