மலைப்பாம்பை பிடித்து நறுக்கி சமைத்துச் சாப்பிட்ட விபரீத இளைஞர்கள்..! கன்னியாகுமரி பகீர்!

வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட குற்றத்திற்காக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி, தேரூர், சுசீந்திரம், மணக்குடி ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள அச்சங்குளத்தில் சிலர் அத்துமீறி மீன் பிடிப்பதாகவும் வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

பூதப்பாண்டி பகுதியில் வனச்சரகர் அவர்களின் ஆணைக்கிணங்க வனவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அச்சங்குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த சிவகுமார் மற்றும் மாணிக்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசாரணையின்போது வனத்துறையினர் இருவரின் செல்போன்களை ஆய்வு செய்தனர். அப்போது அதிலிருந்த புகைப்படங்கள் வனத்துறையினரை பெரிதளவில் அதிர்ச்சி அடைய செய்தன. ஆமை, மலைப்பாம்பு, உடும்பு ஆகிய விலங்குகளை இவர்கள் சமைத்து சாப்பிடுவது போன்று புகைப்படங்கள் இருந்துள்ளன.

உடனடியாக காவல்துறையினர் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். வேறுவழியின்றி சிவக்குமார் காவல்துறையினரிடம் உண்மையை கூறியுள்ளார். அதாவது பொற்றையடி மருத்துவாய்மொழி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற 24 வயது இளைஞருடன் இணைந்து, வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவற்றை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டதற்காக தினேஷ் மற்றும் சிவகுமாரை வனத்துறையினர் கைது செய்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் மீன்பிடித்த குற்றத்திற்காக மாணிக்கராஜுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்துள்ளனர்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.