ஒரே ஒரு மாத்திரை ஓகோனு வாழ்க்கை..! இப்படியும் சில வேலைக்காரிகள்..! அதிர வைக்கும் சென்னை சம்பவம்!

பிரபல மருத்துவரின் வீட்டில் வேலைபார்த்து வந்த வேலைக்காரிகள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை எழும்பூரிலுள்ள காசா மேஜர் சாலையில் பிரபல மருத்துவர் கோகுல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 84. இவர் தன் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் கல்யாண்குமார். கல்யாணகுமார் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். வாரம் ஒருமுறை மட்டும் கோகுல்தாஸை சந்தித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கோகுல்தாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு பணிவிடை செய்வதற்காக கடந்த 16 ஆண்டுகளாக லோகநாயகி என்ற பணிப்பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார். 4 வருடங்களுக்கு முன்னால் தனக்கு உதவியாக இருப்பதற்காக லோகநாயகி உறவினரான ஷாலினி என்பவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

சென்ற வாரம் கல்யாண்குமார் வீட்டிற்கு வந்த போது 6 லட்சம் ரூபாய் பணத்தை பீரோவில் வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த வாரம் சென்று பார்த்தபோது பீரோவில் அந்த பணம் காணாமல் போயிருந்தது. சந்தேகித்த கல்யாண்குமார் பீரோவில் வைக்கப்பட்டிருந்த குடும்ப தங்க நகைகளையும் சரி பார்த்தபோது அதிலும் நிறைய நகைகள் காணாமல் போயிருந்தன. இது குறித்து அவர் தன்னுடைய தந்தையான கோகுல்தாஸிடம் விசாரித்தபோது, பகல் நேரங்களில் மிகவும் அயர்ந்து தூங்கி விடுவதால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக லோகநாயகியையும் ஷாலினியையும் காணவில்லை என்றும் அவர் கல்யாண்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கல்யாண்குமார் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 2 வேலைக்காரப் பெண்மணி களையும் வலைவீசித் தேடி கண்டுப்பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோகுல்தாஸ் வீட்டிலிருந்த பீரோவுக்கு லோகநாயகி கள்ளச்சாவி கண்டுபிடித்துள்ளார். இரவில் கொடுக்கப்படவேண்டிய தூக்க மாத்திரைகளை பொடியாக்கி பகல் நேரத்தில் சாப்பாட்டுடன் வயதான தம்பதிக்கு வழங்கியுள்ளார். அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது பீரோவில் இருந்த தங்க கட்டிகள், பணம் முதலியவற்றை திருடியுள்ளார்.

ஷாலினி லோகநாயகி திருடுவதை பார்த்த பின்னர், தன் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளார். சமீபத்தில் லோகநாயகி தன்னுடைய மகளின் திருமணத்தை திருடிய பணம் மற்றும் நகைகளை வைத்து ஆடம்பரமாக நடத்தி முடித்துள்ளார். அதேபோன்று ஷாலினி தன்னுடைய மகளின் மஞ்சள் நீராட்டு விழாவும் ஆடம்பரமாக நடத்தியுள்ளார். வறுமையில் இருந்த இவ்விருவருக்கும் திடீரென்று பணம் எவ்வாறு குறித்தது என்பது புரியாமல் அக்கம்பக்கத்தினர் குழப்பத்தில் இருந்தனர்.

இதனிடையே சென்ற வாரம் இருவரும் இணைந்து 6 லட்சம் ரூபாய் திருடியபோது சிக்கிக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது எழும்பூர் காசா மேஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.