கேரள அருவிக்குப் போன நிதி மேலாளர்களின் காரை நொறுக்கிய லாரி...சம்பவ இடத்திலே துடித்து பலியான இருவர், உயிருக்குப் போராடும் மூவர்

இன்று அதிகாலை லாரி மீது கார் மோதியதில் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 2 பெயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவமானது செங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல நிதி நிறுவனமொன்று, புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது. குற்றால சீசன் என்பதால் அருகில் உள்ள சில பகுதிகளின் மேலாளர்கள் குற்றாலத்திற்கு சென்று குளிக்க விரும்பினர். அவ்வாறு புதுக்கோட்டை கிளை மேலாளர் பாண்டீஸ்வரன், பொன்னமராவதி கிளை மேலாளர் ரமேஷ், திருப்பத்தூர் கிளை மேலாளர் விஜயகுமார், ஆலங்குடி கிளை மேலாளர் காஜாமொய்தீன் ஆகியோர் காரில் குற்றாலத்தில் குளிப்பதற்கு புறப்பட்டனர். குற்றாலத்தில் நன்கு குளித்து விட்டு கேரளாவில் உள்ள அருவியில் குளிப்பதற்காக பயணம் மேற்கொண்டனர்.

அதிகாலை திருமங்கலம்-கொல்லம் நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தனர். செங்கோட்டையில் உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்ற போது, எதிரே கேரளாவை நோக்கி வந்த லாரியொன்று எதிர்பாராவிதமாக இவர்கள் கார் மீது மோதியது.

மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பாண்டீஸ்வரன் மற்றும் ரமேஷ் உயிரிழந்தனர். அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்தனர். பின் இருக்கைகளில் அமர்ந்து இருந்த 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை காப்பாற்றி தென்காசி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

புளியரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த விபத்தானது செங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.