காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 2 எம்எல்ஏக்கள்! ஆட்சி கவிழ்வது உறுதி!

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ 2 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளனர்.


அம்மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து, ஆட்சியமைத்துள்ளன. இதன்படி, ஹெச்.டி. குமாரசாமி முதல்வராக உள்ளார். குமாரசாமி அரசு ஓராண்டை நிறைவு செய்த நிலையில், தற்போது, கூட்டணி கட்சியான காங்கிரஸை சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதற்கான ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்சமயம், முதல்வர் குமாரசாமி அமெரிக்கா சென்றுள்ள சூழலில், கூட்டணி கட்சி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளது, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதவிர, மேலும் சிலர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன. இதனால், எந்நேரமும் ஆட்சி கலைய நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இதுபற்றி கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் குமாரசாமி, தங்களது ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், பாஜக இத்தகைய குழப்பம் விளைவிக்க முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் அமைச்சரவையை விரிவுபடுத்திய குமாரசாமி, சுயேச்சை எம்எல்ஏ.,க்கள் 2 பேருக்கு, அமைச்சர் பதவி வழங்கினார். இதனால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியினர் இடையே அதிருப்தி ஏற்பட்டதாகவும், இதுவே 2 எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா முடிவுக்கு காரணம் எனவும், ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.