பாழடைந்த வீட்டுக்குள் 12 வயது சிறுமியின் சடலம்..! உடல் முழுவதும் காயம்..! பள்ளிக்கூடம் சென்று திரும்பியவளுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்னர் மாயமான 12 வயது சிறுமி பாழடைந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நெல்லை மாவட்டம் கூட்டப்பனை என்ற கடற்கரை கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர் சிறுமியை தேடிவந்தனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்கிடையே அதே கிராமத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தது 2 தினங்களுக்கு முன்னர் மாயமான 12 வயது சிறுமி என்பதை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அங்கு வந்த பெற்றோர், உறவினர்கள் சிறுமியின் அலங்கோல நிலையை பார்த்து கதறி அழுதனர். பின்னர் சிறுமியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் பாழடைந்த வீடு அருகே கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாகவும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள்தான் இந்த சிறுமியை கொன்றிருக்கலாம் என்றும் கூறினர். இதை அடுத்து சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.