மதுரை மாவட்டம் கே.புதூரில் பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த 11ம் வகுப்பு மாணவி! மதுரை அதிர்ச்சி!
மதுரை மாவட்டம் கே.புதூர் அடுத்த காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகள் அர்ச்சனா லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார். அர்ச்சனா கடந்த 10 நாட்களாக பள்ளிக் கூடம் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு சீக்கிரமாக அதாவது 8 மணிக்கே சென்றுள்ளார் அர்ச்சனா.
பின்னர் வகுப்பறையில் இருந்த மின்விசிறியில் சேலை ஒன்றை கட்டி தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் அர்ச்சனா. பள்ளி நேரம் ஆரம்பித்து மாணவிகள் வகுப்பறை வந்தபோது அர்ச்சனா தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்ன தலைமை ஆசிரியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றினார். அப்போது அங்கு திரண்ட மாணவி அர்ச்சனாவின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவி உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் பதில்கூறியே ஆகவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து வைத்த போலீசார் அர்ச்சனாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு வாரமாக மாணவி ஏன் பள்ளிக்கு செல்லவில்லை, படிப்பில் நாட்டம் இல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அர்ச்சனாவுடன் படிக்கும் சக மாணவிகள், ஆசிரியர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பபட்டது.