உயிர்காக்கும் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட118 அவசரகால ஊர்திகள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா நோய் தொற்று இன்னமும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக நேற்று 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதனால், கொரோனா நோய் தொற்று சிகிச்சை முறை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை சமாளிக்கும் வகையில், கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 108 ஆசர கால ஊர்தி சேவைக்காக உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசர கால ஊர்திகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு ரத்த வங்கிகளின் சேவைக்காக 10 ரத்ததான ஊர்திகள் மற்றும் தமிழ்நாட்டில் கோவிட் 19 கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 18 அவசரகால ஊர்திகள் என மொத்தம் 118 புதிய ஊர்திகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஆம்புலன்ஸ்க்குள் ஏறி, அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.