40 நாட்களுக்கு பிறகு திறப்பு! 9 மணி நேரத்தில் ரூ.100 கோடிக்கு விற்பனையான மதுபானம்! எங்கு தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 100 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவை வெளியிட்டது. எனினும் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கில் சில தலர்வுகளை அறிவித்திருந்தது. அந்த வகையில் 40 நாட்களுக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன. மதுபான கடைகளுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அதிலும் 9 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் 100 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளதாக கலால் துறையிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக 70 முதல் 80 கோடிக்கு தான் மதுபானங்கள் விற்பனை ஆகும். ஆனால் நேற்று ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது எனவும் அது மட்டும் அல்லாமல் உத்தர பிரதேசத்தின் தலைநகரில் மதுபான கடைகளில் நான்கு மணி நேர வேலை நேரத்தை குறைத்த பின்பும் கூட நேற்று பகலில் மட்டும் 6.3 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் குறைவான பணியாளர்களை கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும் 100 கோடி ரூபாய் வருவாயை ஒரே நாளில் கொடுக்கும் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை எனவும் கலால் துறையின் முதன்மைச் செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த 40 நாட்களுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 25600 மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த இரண்டு மூன்று நாட்களில் பொதுமக்கள் மதுபானங்களை வாங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மதுபான கடைகளுக்கு வெளியிலே நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் கண்டிப்பாக முக கவசத்தை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு முக கவசத்தை அவர்கள் பயன்படுத்தாவிட்டால் வரிசையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் சஞ்சய் பூஸ்ரெட்டி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 உத்தரபிரதேசத்தில் உள்ள சில முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் அந்தப் பகுதியில் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டால் இன்னும் விற்பனை அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.