2வது மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம்! 10 மாத பேத்தியை அடித்து கொன்ற கொடூர தாத்தா! பதற வைக்கும் காரணம்!

10 மாத குழந்தையை சொந்த தாத்தாவே அடித்து கொலை செய்திருக்கும் சம்பவமானது கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள அரசம்பாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய மனைவியின் பெயர் முத்துமாலை. இத்தம்பதியினருக்கு பிறந்து 10 மாதமேயான தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.

குமாரின் தந்தையின் பெயர் செல்வராஜ். செல்வராஜ் மூத்த மனைவி இறந்துவிட்டார். சக்திகனி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாக சக்திகனி தன் தாயாரின் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கு குமாரும் அவருடைய மனைவியுமான முத்துமாலையே காரணமென்று செல்வராஜ் நினைத்து கொண்டார்.இதனால் செல்வராஜ் குமாரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனிடையே திடீரென்று நேற்று காலையில் தர்ஷினி காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடிய பிறகு கிடைக்காத விரக்தியில் குமார் காவல் நிலையத்தில் தர்ஷினியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். சம்பவத்திற்கு சில மணிநேரத்திற்குப் பிறகு செல்வராஜும் காணாமல் போனார். இதனால் காவல்துறையினர் செல்வராஜ் மீது சந்தேகித்து தேடி வந்தனர். இன்று காலையில் காவல்துறையினர் செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை அடித்து கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். மண்டபம் பகுதியில் உள்ள பேக்கரியின் பின்புறத்தில் சடலத்தை வீசியதாக கூறியுள்ளார்.

காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜை கைது செய்து குழந்தையை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.