ஸ்ரீரங்கம் மூலவர் ஸ்ரீரங்கநாதனின் ஒரு கண் மாஸ்கோ மியூசியத்தில் இருப்பது தெரியுமா..? திருப்பிக்கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்குமா?

இந்திய தெய்வங்களில் குஜராத்தில் இருக்கும் சோமநாதர் கோவிலுக்கு அடுத்து அதிகம் தாக்குதலுக்கு ஆளான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்தான்,காரணம் பல நூறு ஆண்டுகளாக அங்கு குவிந்திருந்த செல்வம்.


மொகலாயர் படைஎடுப்பு நிகழ்ந்த போது திருவரங்கம் மூலவர் சிலைக்கு முன்னால் கற்சுவர் எழுப்பி மறைத்து ,வேறு ஒரு சிலையை வைத்து விட்டு,உற்சவர் சிலையைத் தூக்கிக்கொண்டு கேரளா,ஆந்திரா என்று பக்த்தர்கள் பல ஆண்டுகள் பக்த்தர்கள் அலைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இந்த ரங்கநாதர்.

1747ல் ஆற்காடு போர்கள் நிகழ்ந்த சமயத்தில் ரங்கநாத பெருமாளின் கண்ணில் பாதிக்கப்பட்டு இருந்த வைரம் திருட்டுப் போனது. இதை செய்தது ஒரு ஃபிரஞ்சு போர் வீரன் என்றும், அவன் உள்ளூர் பக்தன் போல மாறுவேடத்தில் வந்து திருடியதாகவும் சொல்லப்படுகிறது.183.62 கேரட் எடை கொண்ட அந்த வைரத்தை அவன் சென்னைக்கு கொண்டுவந்து ஒரு ஆங்கிலேயருக்கு அப்போதே 2000 பவுண்டுக்கு விற்று விட்டானாம்.

அந்த ஆங்கிலேயன் அதை லண்டனுக்கு எடுத்துச் சென்று விற்றுவிட அது பலகைகள் மாறி ஆம்ஸ்டர்டாம் நகரில் விற்பனைக்கு வந்தபோது அதை ஷஃப்ரஸ் என்கிற வணிகர் வாங்குகிறார். அவர் அன்றைய ரஷ்யாவின் ராணியாக இருந்த கேத்தலின் தி கிரேட்டின் காதலரான கிரிகோரி கிரிகோரியச் ஓர்லோவ் என்கிற ரஷ்ய பிரபுவுக்கு 14 லட்சம் ஹங்கேரிய பணத்திற்கு விற்கிறார். அதன் பிறகு அந்த வைரத்தின் பெயர் ஓர்லோவ் வைரமாகி விடுகிறது.

கோழி முட்டையில் பாதி அளவு இருந்த அந்த வைரம் கேத்தரின் மறைவுக்குப் பிறகும் ரஷ்ய அரச குடும்பத்திலேயே தங்கிவிட்டது. ரஷ்ய புரட்சிக்குப் பிறகு அது நாட்டுடைமை ஆகி இன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அது ரங்கநாதனின் கண்ணெல்லாம் இல்லை. அது விலையை ஏற்றுவதற்காக ஐரோப்பிய வைர வியாபாரிகள் கிளப்பிவிட்ட கதை என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.