காதும் கேட்காது..! பேசவும் முடியாது..! ஆனால் ஒரே பதிலில் ரூ.1 கோடி வென்ற மதுரை கவுசல்யா! எப்படி தெரியுமா?

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதல் முறையாக மாற்று திறனாளி பெண் ஒருவர் 1 கோடி பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்


மதுரையை சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா என்பவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஜாக்பாட் தொகையான ஒரு கோடி பரிசை வென்று சாதனை படைத்தார் 

அதிர்வுகள் மற்றும் வாய் அசைவுகள் மூலமாக கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற அவருக்கான பாராட்டு விழாவில் கலர்ஸ் தமிழ் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் , கோடீஸ்வரி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கௌசல்யா கார்த்திகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு கோடி ரூபாய் பரிசு தொகைக்கான காசோலையை வழங்கினர்.  

தான் பெற்ற இந்த பரிசுத் தொகையில் ஒரு சிறிய தொகையை நாகர்கோயிலில் தாம் படித்த வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதே போல் இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு செல்லும் தனது கனவை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறார்.  

வாய் பேச முடியாத, காது கேட்கும் திறனும் அல்லாது கௌசல்யா கார்த்திகா எம்.எஸ்.சி. , எம்.பி.ஏ. பயின்று மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தன்னம்பிக்கையோடு கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கோடி ரூபாய் வென்று சாதனை படைத்துள்ளது தன்னம்பிக்கைக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.