அமைச்சர் முன்னிலையில் தீக்குளித்த விவசாயி! அதிர வைக்கும் காரணம்!

புல்தானா: மின் இணைப்பு தராததால் விரக்தியடைந்த விவசாயி, அமைச்சர் முன்னிலையில், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம், வதோடா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் காரதே என்ற விவசாயி கடந்த 40 ஆண்டுகளாக, தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கோரி வருகிறாராம். அதாவது, அவரது தாத்தா காலத்தில் இருந்தே இந்த பிரச்னை உள்ளதாகவும், மாநில மின்சார வாரியம் பாராமுகம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி காரதே,  சனிக்கிழமையன்று மகாராஷ்டிர எரிசக்தித் துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே முன்பாக, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைய, அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அமைச்சர் சந்திரசேகர் உத்தரவிட்டார். அதேசமயம், மின்சாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ''விவசாயி காரதே, உரிய கட்டணத்தை செலுத்தாத காரணத்தாலேயே அவருக்கு இதுவரை மின் இணைப்பு தரப்படவில்லை. இதை அவர் புரிந்துகொள்ளாததே, இவ்வளவு தாமதத்திற்கு காரணம்,'' என்கின்றனர்.