சினிமாவில் நடிக்கலாம்னு சொன்னாங்க! நம்பி கொடுத்தேன்! ஆனா இப்போ அடிச்சே கொல்றாங்க! திமுக வட்டச் செயலாளர் மீது பகீர் புகார்!

சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி கல்லூரி மாணவரிடம் மோசடி செய்த நடிகரையும், அவரின் தந்தையான தி.மு.க பிரமுகரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.கண்ணன். சேப்பாக்கம் பகுதி தி.மு.க. நிர்வாகியாக இருக்கிறார். இவர் தனது மகன் கவித்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து நம்ம கத என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். 

அந்தப் படம் சரியாக ஓடாத நிலையில் ரூட்டு என்ற திரைப்படத்தை கண்ணன் தயாரிப்பதாக விளம்பரங்கள் வெளியாகின இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் கண்ணனும் கவித்திரனும் கம்பியெண்ணிக் கொண்டிருக்கின்றனர். 

விவகாரம் இதுதான். கடந்த கடந்த 2017-ஆம் ஆண்டு மூர்த்தி சென்னை திருவல்லிக்கேணியில் விடுதி ஒன்றில் தங்கி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருந்தார். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த கவித்ரன், அவரது சகோதரர் நிகவித்ரன் இருவரும் அவருக்கு நண்பர்களாகியிருக்கின்றனர். 

தங்களது தந்தையின் அறுவை சிகிச்சைக்குத் 1,50,000 ரூபாய் கொடுத்தால் ஒரே வாரத்தில் திருப்பித் தருவதாகவும், தாங்கள் புதிதாக தயாரித்து வரும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகவும் அவர்கள் கூறியதை நம்பி மூர்த்தி தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு கட்டணத்துக்காக பகுதி நேர வேலை பார்த்து சேர்த்து வைத்திருந்த 1,30,000 ரூபாயை கொடுத்தார். 

ஆனால் அவர்கள் பல முறை கேட்டும் பணத்தைக் கொடுக்காததால் மூர்த்தி தனது இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. 

சொந்த ஊருக்குத் திரும்பிய மூர்த்தி கூலி வேலைக்குச் சென்ற நிலையில் பணத்தை திரும்பக் கேட்பதை மட்டும் விடவில்லை ஆனால் கிடைக்காத நிலையில் மூர்த்தி கவித்ரனின் தந்தையான கண்ணனை தொடர்பு கொண்டார். அப்போது கண்ணன் தகாத தகாத வார்த்தைகளால் வசைபாடியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த மூர்த்தி அப்போது மூர்த்தி செய்த ஒரே சாமர்த்தியமான காரியம் அவர்கள் பேசியதை ரெக்கார்ட் செய்ததுதான். இதனைத் தொடர்ந்து பணத்தை கேட்க சென்னைக்கு வந்த மூர்த்தியை பெல் சாலையில் இருக்கும் செஞ்சுரியன் ஹோட்டல் அருகே காத்திருக்குமாறு கண்ணன் உள்ளிட்டோர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது 

அங்கு வந்த அவர்கள் மூர்த்தியை கடுமையாக மிரட்டியதுடன் சரமாரியாகத் தாக்கியதில் மூர்த்தி மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்து எழுந்த மூர்த்தி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். 

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் எஸ்.எஸ்.கண்ணன், கவித்ரன் மற்றும் நிகவித்ரன் மீது மோசடி, தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்ணன், கவித்திரனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் நிகவித்திரனை தேடி வருகின்றனர்.