செவ்வாய் தோஷம் நீங்க வேண்டுமா? இந்த கோவிலில் சென்று தரியுங்கள்..!

ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் இடையில் இருவரில் பெரியவர் யார் என்ற போட்டி ஏற்பட்டது.


மேருமலையை ஆதிசேஷன் வளைத்து பிடித்துக் கொள்ள அதன் பிடியிலிருந்து மேரு மலையை மீட்க வேண்டும் என்பதே போட்டி. இதில் மேரு மலையின் சிரசுப் பகுதியாகத் திகழ்ந்த சிகரம் சிதறி பூமியில் விழுந்தது. அந்த சிகரம் விழுந்த இடமே ஈரோட்டில் உள்ள சென்னிமலை. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.

இங்குள்ள முருகப் பெருமானின் விக்ரகம் தலையிருந்து வயிற்றுப் பகுதி வரை மட்டுமே வேலைப்பாடுகளுடன் காணப்படும். அதற்குக் கீழ் ஒழுங்கின்றிக் காணப்படும். முருகப்பெருமானே அர்ச்சகர் உருவில் வந்து பூஜித்து, சோழ மன்னன் ஒருவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருள்பாலித்தாராம். இங்கு இந்திரனும் லட்சுமியும் பூஜை செய்து அருள் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இடும்பனுக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியை காட்டியருளியதும் இங்குதான். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.

அருணகிரிநாதர் இந்த தலத்தில் திருப்புகழ் பாடி இறைவனை தொழுதுள்ளார். இங்கு இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். அப்படி அபிக்ஷேகிக்கப்படும் தயிர் புளிப்பதில்லையாம். அதேபோல் ஆலயக் கோபுரத்தின் மீது காகங்கள் பறப்பதில்லை.

நவகிரகங்களில் செவ்வாய் தவிர்த்து பிற கிரகங்கள் இங்கு மூலவரைச் சுற்றி அமைந்துள்ளன. செவ்வாயின் அதிபதியாக முருகக் கடவுளே மையத்தில் அமர்ந்திருக்கிறார். இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.