2வது போட்டியிலும் நியூஸிலாந்தை வென்ற இந்தியா!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.


டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். தவான் 66 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 87 ரன்களும் எடுத்தனர். பின்னர் இறங்கிய கோஹ்லி மற்றும் அம்படி ராயுடு மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடினர்.

ராயுடு 47 ரன்களுக்கும், கோஹ்லி 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டோனி அதிரடியாக விளையாடி 48 ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் குப்தில் 15  ரன்களுக்கும், முன்ரோ 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையாக ஆடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். பிரெஸ்வேல் மட்டும் அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.