உங்கள் பூஜையறை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது? இப்படித்தான் பலன் இருக்கும்!

ஒரு இல்லத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்படிப்பட்ட மனநிலையை உடையவர்களும் வருவார்கள்.


அப்படி வருகின்ற மக்கள் எப்படி பட்டவர், தூய்மையாக, சுத்தமாக வந்திருக்கிறாரா என்பதெல்லாம் ஒரு வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கு தெரியாது. அதே நேரம் வருகின்ற மக்களை இல்லத்தில் வெளியே நிற்க வைத்து பேசி அனுப்புவதும் தமிழரின் சரியான விருந்தோம்பல் கிடையாது. எனவே வருகின்ற மக்களின் தவறான எண்ணப்பதிவுகளும், அவர்களின் தூய்மையின்மை சார்ந்த ஒரு சில விஷயங்களை விலக்கி வைக்கவே நமது முன்னோர்கள் பூஜை அறையை அமைத்து கொடுத்தனர். 

பூஜையறை என்பது கிட்டத்தட்ட கோயிலுக்கு நிகரானது. கோயிலில் என்ன நியமங்களை கடைபிடிக்கிறோமோ அதுபோல வீடுகளில் இருக்கும் பூஜை அறைகளையும் உபயோகிக்க வேண்டும். சொல்லபோனால் மனித மனத்தை சரியானபடி செயல்பட வைப்பதும் பூஜை அறைகளே. வீட்டில் ஐஸ்வர்யம் நிலவ செய்வது என்பது பூஜை அறைகளும் அங்கே நாம் செய்கின்ற வழிபாடுகளும் தான். 

வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும். கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும். 

பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது. 

இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம். ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும், வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம். 

பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம். பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது. சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும். 

வாஸ்து முறைப் படி பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். கதவுகளில் சிறுசிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளைத் தொங்கவிடுவதால் நமைகள் உண்டு. மணியில் இருந்து வரும் ஓசையானது வீட்டிற்குள் சகல ஐஸ்வர்யங்களையும்கொண்டு வரும்.