15 நிமிடங்களில் 1.5 லட்சம் அபேஸ்..! ஆன்லைன் பேங்கிங் மோசடி உஷார்...

ஒருகாலத்தில் திருடர்கள் பதுங்கிப் பதுங்கி வந்து பிக் பாக்கெட் அடிப்பதும். பிளேடு போடுவது என்றிருந்த காலம் மலையேறி,


நவீன ஸ்மார்ட்  போன் காலத்திற்கு ஏற்ப திருடர்களும் தங்களை அப்டேட் செய்துகொண்டு வருகின்றனர், நமக்கு தெரிந்தே நமது பணத்தைத் திருடும் அளவுக்கு அப்டேட்டாக இருக்கின்றனர் இன்றைய இணைய திருடர்கள். ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பனது என்று நினைத்த‌ நொய்டாவைச் சேர்ந்த பெண்மணிக்கு தன் கண்முன்னே வங்கிக் கணக்கில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நிகழ்வுகளை கொண்டாட மும்பை நொய்டாவைச் சேர்ந்த நேஹா என்பவர் பிரான்ஸின் பாரீஸுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள மெட்ரோ ரயிலில் பயணித்த போது. மர்ம நபர்கள் சிலர் இவரது கைப்பயை திருடி உள்ளனர். கைப்பையை தொலைத்த நேஹா காவல் நிலையம் சென்று புகார் அளிக்க எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களில் இவரது வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 1.5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால். இவரது வங்கியில் இருந்து எந்த வித கடவு குறுஞ்செய்திகளும் இவருக்கு வரவில்லை என்பதுதான். இவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு மூலமாக 52499 மற்றும் 44542 ரூபாயும். கடன் அட்டை மூலமாக 52499 ரூபாயை எடுத்துள்ளனர் இணைய திருடர்கள். முறையே இந்த இரண்டு அட்டைகளும் எச்டிஎஃப்சி வங்கியின் கண்க்குடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.

நேஹா உடனே இந்தியாவில் உள்ள அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது. அதற்குள்ளாக இவர் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்துவிட்டனர் இணைய திருடர்கள். தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஆன்லைன் பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்ட இந்த வாடிக்கையாளருக்கு, தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை செயலிகளை போல, பல்வேறு ஹேக்கிங் செயலிகளும் ஆன்லைனில் குவிந்து கிடக்கின்றன. பே - டிஎம், கூகுள் பே,போன் பே போன்ற எண்ணற்ற செயலிகள் பரிவர்த்தனைக்கு எளிதாக இருப்பதால் வாடிக்கையாளர் தேநீர் கடை முதல் பல்வேறு இடங்களில் இந்த செயலிகளை உபயோகிக்கின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வருங்காலங்களில் எதிர் கொள்ளப்போகும் பிரச்சனைகளை பற்றிய பார்வை இல்லாமல் பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை போனில் சேகரித்து வைத்துக்கொள்கின்றனர். மேற்கண்ட ஆன்லைன் அப்ளிகேஷன்கள் பதிவிறக்கம் செய்யும் போது உங்களுடைய புகைப்படங்கள், தொலைபேசி எண்கள், இருக்கும் இடம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி கேட்கின்றன பல அப்ளிகேஷன்கள்.

மேலும், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. என்கிரிப்ட் செய்யப்டாத அத்தகைய வைஃபைகளில் எளிதாக ஹேக்கர்களால் ஊடுறுவ முடியும். வங்கி பரிவர்த்தனைகள், பாஸ்வேர்டு போன்ற தனிநபர் சார்ந்த தகவல்கள் எளிதாக திருடமுடியும்.

ஆன்லைன் பண பரிமாற்றங்கள் நமக்கு எந்தளவுக்கு இலகுவான பயணைத் தந்திருக்கிறதோ, அதே அளவுக்கு பல பிரச்சனைகளையும் கொண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களுக்கு ஒரு மகத்தான கொடையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. 

மணியன் கலியமூர்த்தி