ஆர்டர் செய்தால் குட்டி விமானத்தில் வீடு தேடி வரும் உணவு! ZOMATO அதிரடி பிளான்!

டெல்லி: ஸோமேட்டோ நிறுவனத்தின் டிரோன் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


ஆன்லைன் நிறுவனங்களின் வருகையால், நாளுக்கு நாள் டெலிவரி தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டெலிவரியையும் நவீனப்படுத்தும் முயற்சியில், அமேசான், ஸோமேட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், அமேசான், படிப்படியாக உலகம் முழுவதும் டிரோன் மூலமான டெலிவரி பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஸோமேட்டோ நிறுவனமும், தன் பங்கிற்கு, டிரோன் சேவை நடத்தியுள்ளது. இதன்படி, இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அனுமதியுடன், பாதுகாப்பான பகுதி ஒன்றில், இந்த டிரோன் சோதனையை கடந்த வாரம் ஸோமேட்டோ நிறுவனம் செய்துள்ளது.

சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், இதற்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும், ஸோமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எந்த இடத்தில் இச்சோதனை நடத்தப்பட்டு என்ற விவரம் பாதுகாப்பு காரணங்களுக்காக, வெளியிடப்படவில்லை. இதையடுத்து, விரைவிலேயே ஸோமேட்டோவும் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்கு டிரோன் மூலமாக உணவுப் பொருட்களை விநியோகிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.