ZEE5 ஒரிஜினில் வெப் சீரிஸ் ஆட்டோ சங்கர் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

தமிழகத்தின் முதல் சீரியல் கில்லர் என்று கூறப்படும் ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் குறித்த விமர்சனம் தான் இது.


மொத்தமாக 10 எபிசோட்கள். பத்தையுமே ஒரே நாளில் பார்க்க வைப்பது போன்ற திரைக்கதை. ஒவ்வொரு எபிசோடும் மின்னல் வேகத்தில் சென்று மறைகிறது. கதை நாயகன் ஆட்டோ சங்கர் விபச்சார விடுதி வைத்து நடத்துபவன் என்பதால் அனைத்து எபிசோட்களிலும் அந்த மாதிரி காட்சிகளுக்கு குறையே வைக்கவில்லை.

என்ன தான் விறுவிறுப்பாக வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும் முழுக்க முழுக்க இது உண்மை தழுவல் இல்லை. கடைசியல் சிறையில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பிப்பது பகையாளிகளை கொலை செய்வது என்பதெல்லாம் பக்கா கற்பனையாக தெரிகிறது. இதே போல் பல இடங்களில் லாஜிக் மிஸ்.

1980களில் நடைபெறும் சம்பவங்களின் போது செல்போன் டவர்கள் பிரமாண்டமாக தெரிகின்றன. ஆட்டோ சங்கர் தான் கொலை செய்த சடலங்களை வீட்டில் வைத்து பூசும் போது பயன்படுத்தும் செங்கல்கள் கூட இந்தக்காலத்தில் உள்ளவை தான்.

ஆங்காங்கே நிர்மா விளம்பரம் பெல்ஸ் பேன்ட் போட்ட ஆட்களை மட்டும் நடக்க விட்டு அந்தக்காலம் போல் நம்மை நம்ப வைக்க முயற்சித்துள்ளனர். ஆட்டோ சங்கரை சாராயம் காய்ச்சுபவனாக, விபச்சாரம் செய்ய தூண்டுபவனாக ஒரு எஸ்ஐ காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட அந்த எஸ்ஐ ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்படும் வரை அதே ஸ்டேசனில் தான் பணியாற்றுகிறாராம். இதை எல்லாம் நம்பவே முடியவில்லை.

மேலும் ஆட்டோ சங்கர் முழுக்க முழுக்க நம்பிய விபச்சார பெண்மணி ஒருவர் தான் கடைசியில் அவரை காட்டிக் கொடுத்து அரசியலில் பெரிய ஆளாக ஆவது போல் காட்சி இருக்கிறது. இது சுத்த சினிமாக்காரத்தனம். இதே போல் நடிகை ஒருவர் ஆட்டோ சங்கரை தனது இச்சையை தீர்த்துக் கொள்ள அழைப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

ஆட்டோ சங்கர் என்றாலே நினைவுக்கு வருவது தான் அவன் கொலை செய்த சடலங்களை வீட்டிற்குள் வைத்து பூசிவிடுவது தான். ஆனால் அதனை அவ்வளவு தெளிவாக சீரிசில் காட்டவில்லை. இதே போல் இளம் பெண்கள் பலரை கடத்தியதாக ஆட்டோ சங்கர் மீது புகார் உண்டு. அதைப்பற்றியும் எந்த எபிசோடிலும் மூச்சுவிடவில்லை.

முழுக்க முழுக்க ஆட்டோ சங்கரை ஒரு தியாகி போலவும், அவனது அனைத்து குற்றங்களுக்கும் போலீசும், அரசியல்வாதிகளும் தான் காரணம் என்று கூறுவது எல்லாம் சுத்த அயோக்கியத்தனம். சுமார் 6 பேரை ஆட்டோ சங்கர் கொலை செய்துள்ளான். இதனை அவனே ஒப்புக் கொண்டுள்ளான். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வெப் சீரிஸ் எடுத்தாலே அது பிச்சிக் கொண்டு ஓடும்.

மிக அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள் அந்த வகையில் பாராட்டலாம். ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறார்கள். இசையிலும் அசத்தல். ஆட்டோ சங்கராக நடித்துள்ள சரத் அப்பணி நம்மை அப்படியே 1980களுக்கு கொண்டு சென்றுவிடுகிறார். காது கூசும் அளவிற்கு ஓபனாக கெட்ட வார்த்தைகள் மிகப்பெரிய மைனஸ்.

கண்டிப்பாக பீப் சவுண்ட் போடுவது நல்லது. சுதந்திரம் இருக்கிறது என்பதற்கான இவ்வளவு அப்பட்டமான கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பது கூடிய விரைவில் வெப் சீரிஸ்களுக்கும் சென்சார் வைக்கும் நிலையை உருவாக்கிவிடும். காட்சிகளை பொருத்தவரை பெரிய அளவில் ஆபாசம் இல்லை. மிகவும் கவனமாக செக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் சினிமா காதலர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டியது. இதே போல் சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் கிரைம் படங்களை விரும்புவர்கள் பார்க்கும் வகையில் தான் எடுத்துள்ளார்.