காட் மேன் தொடரை நிறுத்தியேவிட்டது ஜீ குழுமம்..! பா.ஜ.க.வுக்கு வெற்றியா இது..?

பிராமணர்களைப் பற்றி அவதூறு பரப்புகிறது என்று பா.ஜ.க.வினர் வரிந்துகட்டிக்கொண்டு மேலிடத்த்துக்குப் புகார் சொல்லவே, ஒருவழியாக அந்தத் தொடருக்கு என்ட் கார்டு போட்டுவிட்டது ஜீ குழுமம்.


ஆம், ஜீ குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் களத்தில் பொறுப்புள்ள முன்னணி தளமாக ஜீ குழுமம் செயல்படுகிறது. உள்ளடக்கங்களின் சுய தணிக்கைகளில் கடுமையான வழிகாட்டு முறைகளை இந்தத் தளம் பின்பற்றி வருகிறது. இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாகப் பல அம்சங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தி வருகிறது. முற்றிலுமாகத் தன் பார்வையாளர்களின் நலனுக்காக, ஆன்லைன் உள்ளடக்கங்களின் சுய தணிக்கை சட்டத்தில் முதலில் கையெழுத்திட்டவர்களில் ஜீ குழுமமும் ஒன்று.

எங்கள் சமீபத்திய தமிழ் தொடராக 'காட்மேன்' தொடர்பாக வந்த கருத்துகள் அடிப்படையில் அந்தத் தொடரின் வெளியீட்டை இந்தத் தருணத்தில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தத் தொடருக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ, ஜீ குழுமத்துக்கோ எந்த ஒரு மதத்தின் நம்பிக்கையையோ, சமூகத்தையே, தனி நபரின் நம்பிக்கையையோ காயப்படுத்தும் எண்ணமில்லை. தன் பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்காகப் பல மொழிகளில் சமூகத்தின் சிறப்பான அம்சங்களைப் பிரதிபலிக்கும் 100க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை ஜீ குழுமம் வழங்கி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான கோழைத்தனம் என்று படைப்பாளிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஒரு டீஸரை வைத்து முடிவெடுப்பதே தவறு. அப்படி முடிவு எடுக்கிறார்கள் என்றால், இனி யாரும் எதையும் டீஸரில் வெளிப்படுத்தவே முடியாது என்கிறார்கள்.

கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இப்படிப்பட்ட வெப்சீரிஸை தடை செய்வது என்ன நியாயம் என்று கேட்கிறார்கள். ஏனென்றால், சென்சார் இல்லை என்ற போர்வையில் கழிசடை சீரிஸ் எல்லாமே இன்று ஓ.டி.டி. தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது பிராமணர்களை எதிர்த்தால் மட்டும் தடை போடுவதா..?

சரியான கேள்விதான். பதில் சொல்லத்தான் யாரும் தயராக இருக்க மாட்டார்கள்.