மீண்டும் எடியூரப்பா! ஜனநாயகம் கர்நாடகாவில் செத்துப் போச்சப்பா..!

நரேந்திர மோடி இரண்டாவது முறை, கூடுதல் மெஜாரிட்டியில் பிரதமராக பதவியில் அமர்ந்த நேரத்திலேயே எதிர்பார்த்த விஷயம்தான், கர்நாடக ஆட்சியில் குளறுபடி.


கொஞ்சம் தாமதமாக தற்போது நிறைவேறியிருக்கிறது. ‘ஆபரேஷன் கமலா’ என்ற திட்டத்தின் கீழ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. அரசு. எப்படியாவது எம்.எல்.ஏ.க்களை சரிக்கட்டி விடலாம் என்று குமாரசாமி எடுத்த அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போகவே, வேறு வழியின்றி ராஜினாமா செய்தார்.

குமாரசாமி ராஜினாமா செய்ததுமே பதவி ஏற்றுக்கொண்டால், மக்களிடம் தங்கள் குட்டு அம்பலாகிவிடும் என்றோ என்னவோ, இரண்டு நாட்கள் மத்திய பா.ஜ.க. அமைதியாக இருந்தது. டெல்லியில் இருந்து சிக்னல் எப்போது வரும் என்று காத்துக்கிடந்தார் எடியூரப்பா.

இதையடுத்து கர்நாடக பாஜக தலைவர்கள் நேற்று டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள். இப்போதைய நிலையில், ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் எளிதாக வெற்றி அடைந்துவிடும் என்று அமித் ஷா சொன்னதை லோக்கல் பி.ஜே.பி.யினர் ஏற்கவில்லை. இப்போது குமாரசாமிக்கு அனுதாப அலைதான் வீசும். அதனால் நாமே ஆட்சி அமைக்கலாம் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதன்படி, எடியூரப்பா ஆட்சிக்கு உரிமை கோருவதற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கவர்னரை சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார். பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், உடனடியாக பதவி ஏற்க அனுமதி வேண்டும் என்று கேடுக்கொண்டார். உடனே கவர்னரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இனிமேல் கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி என்பதாலும், கர்நாடகாவில் நன்றாக மழை பெய்வதாலும், காவிரி நீர் பொங்கிவரும் என்றே நம்புவோம்.