டாக்டர் சீட் தேவையில்லை! உதறித் தள்ளி தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழச்சியின் கதை!

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தை சேர்ந்த இளவேனில் துப்பாக்கிச் சுடுதலில் உலக அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார். தற்போது அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


வாலறிவன் – சரோஜா தம்பதிக்கு பிறந்தவர் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில். பணி நிமித்தமாக இவர்கள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர்.  

தற்போது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தது நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இளவேனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3 வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவேனிலின் சகோதரன் பெயர் இறைவன். அவர் ராணுவத்தில் சேர்ந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டதை பார்த்த இளவேனிலுக்கும் தானும் துப்பாக்கியை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. 7-ம் வகுப்பு படிக்கும் போதே துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்த இளிவேனிலின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது அப்பா வாலறிவன் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த இளவேனிலுக்கு மருத்துவ படிப்பு வாய்ப்பும் வந்தது. ஆனால் அதில் அதிகம் நாட்டம் கொள்ளாத இளவேனில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தினார். துப்பாக்கிச் சுடும் போட்டிகள் ஜப்பான், மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பரிசுகள் பெற்றுள்ளார் இளவேனில்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் தற்போது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கம் வென்றது தமிழ்நாட்டிற்கே பெருமையாக உள்ளது. இளவேனிலின் வெற்றி குஜராத் மாநில மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ சீட் கிடைக்க வில்லை என்றால் வாழ்க்கை சூனியமாக மாறிப்போனது போல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகளுக்கு நடுவில் மருத்துவ சீட் கிடைத்தும் அதை உதறி தள்ளிவிட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த இளவேனிலின் புகழை நாமும் மெச்சுவோம்.