2 பெண்களின் கைகள் துண்டாகின! பேருந்து ஜன்னலில் கை வைத்து உறங்கியதால் விபரீதம்!

விழுப்புரம் செஞ்சி அருகே, 2 அரசு பேருந்துகள் பக்கவாட்டில் உரசியதில் இரு பெண்களின் கைகள் துண்டாகின.


மேல்மலையனூரில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசுப் பேருந்து புறப்பட்டது. இதே போல் சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மற்றொரு பேருந்து வந்து கொண்டிருந்தது.

இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் பேருந்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. ஓல்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாந்தி மற்றும் சென்னை மறுங்கரை பகுதியை சேர்ந்த பிரபாவதி ஆகிய இருவரும் பேருந்தின் ஜன்னலில் கைகளை வைத்துக் கொண்டு மெய்மறந்து உறங்கியுள்ளனர்.

செஞ்சி பயணியர் மாளிகை அருகே இரண்டு பேருந்துகளும் எதிரெதிரே வந்தன. அப்போது குறுகிய சாலை என்பதால் இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உரசியுள்ளன. இதனால் பேருந்து ஜன்னலில் கை வைத்து உறங்கிய சாந்தி மற்றும் பிரபாவதியின் கைகள் துண்டாகி விழுந்தன.

வலியால் அலறி துடித்த இரண்டு பெண்களும் உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கப்பட்டனர். ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைகள் சிதைந்து போய்விட்டதால் அவர்கள் நிலைமை பரிதாபம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.