லக்னோ: அயோத்தியில் குளிரில் வாடும் பசுக்களுக்கு கோட் வழங்க அயோத்தி நகராட்சி முடிவு செய்துள்ளது.
குளிர் காலத்தில் பசுக்களுக்கு கதகதப்பான கம்பளி உடை..! ரூ.300 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

புனித நகரான அயோத்தியில் ஏராளமான பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பசுக்களுக்கு உரிய தங்கும் வசதிகள் கிடையாது, சாலையிலேயே நடமாடுகின்றன. இந்நிலையில், அயோத்தி நகரம் முழுக்க உள்ள பசுக்களுக்கான புதிய பராமரிப்பு திட்டத்தை அயோத்தி நகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 4 கட்டங்களாக, நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டத்தின்கீழ், பைஷிங்பூர் பகுதியில் பசுக்கள், எருமைகள் மற்றும் கன்றுக்குட்டிகளை தங்க செய்யக்கூடிய வகையில் மிகப்பெரிய குடோன் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு ரூ.250 முதல் 300 வரை விலையுள்ள கோட் வழங்கப்படும். இதன்மூலமாக, குளிரில் வாடாமல் பசுக்கள் பாதுகாக்கப்படும், என்று அயோத்தி நகராட்சி ஆணையர் நிரஜ் சுக்லா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதுதவிர, மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள் முதலாக, பசு மாடு, சாணம் மற்றும் அதன் சிறுநீர் உள்ளிட்டவை தொடர்பான சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. இதில் சமீபத்திய வரவாக பசுக்களுக்கு கோட் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.