ஆதரவு தேடி தமிழகம் வந்த வெளிநாட்டுப் பறவைகள்! கொத்து கொத்தாக உயிரிழந்த பரிதாபம்!

நெல்லை மாவட்டத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றால் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்தன.


நெல்லை மாவட்டம், கூந்தங்குளத்தில் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தை பாதுகாக்க கிராம மக்களும் பொறுப்பு எடுத்துக்கொண்டுள்ளனர். இந்தக் கிராமத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதில்லை.

மக்களின் சிறப்பான பராமரிப்பு காரணமாக வீடுகளின் கூரைகளிலும் வீடுகளுக்கு அருகில் இருக்கும் மரங்களிலும் பறவை இனங்கள் கூடுகட்டி வசிக்கின்றன. அத்துடன் குளத்தில் உள்ள மரங்களிலும் வசிக்கின்றன. இந்த சரணாலயத்தில் செங்கால்நாரை, கூழக்கடா, அரிவாள்மூக்கன், பூநாரை, பட்டைத்தலை வாத்து என 43 வகையான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.

ஜெர்மனி, சைபீரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் கூந்தங்குளத்துக்கு வந்து குஞ்சு பொரித்து திரும்பிச் செல்கின்றன. இந்நிலையில், நாங்குநேரி மற்றும் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயப் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் பறவைகளின் கூடுகளும் பறவைகளின் குஞ்சுகள் கீழே விழுந்தததில் பல பறவைகள் உயிரிழந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. தகவல் அறிந்து வந்த வனத்துறையின காயம் அடைந்த பறவைகளை மீட்டு சிகிச்சை அளித்ததோடு உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமான பறவைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழி தோண்டிப் புதைத்தனர்.