வேலுமணியின் சவாலை ஏற்பாரா ஸ்டாலின்? ஆயிரம் கோடி ஊழல் என்பது நிஜம்தானா? அறப்போர் இயக்கத்தை நம்பலாமா?

தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அமைப்புத்தான் அறப்போர் இயக்கம் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.


அவர்கள் எடுத்துக்கொடுத்த மணல் மோசடியைத்தான் ஸ்டாலின் பேசியிருந்தார். அதாவது ஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் மணல் உபயோகித்து ஆயிரம் கோடி ரூபாயை அமைச்சர் வேலுமணி மோசடி செய்துவிட்டார் என்று புகார் சொல்லியிருந்தார். இதனைக் கண்டு டென்ஷன் ஆகிவிட்டார் வேலுமணி. 

ஸ்டாலின் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய் என்று கூறியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வெறுமனே குற்றச்சாட்டுகளை கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரத்தைக் காட்டினால் அத்தனை பதவியில் இருந்தும் ராஜினாமா செய்யத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.  

அப்படி குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் தி.மு.க தலைவர், எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறந்துவிட்டு, அரசியலில் இருந்தே ஒதுங்கிப் போவாரா ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பியுள்ளார் வேலுமணி.

இந்த விஷயத்தில் ஸ்டாலின் இப்போது கப்சிப். ஏனென்றால் ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால், ஆற்று மணலைவிட எம்.சாண்ட் விலை குறைவு என்பது மார்க்கெட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.

ஆனால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆயிரம் கோடி ஊழல் என்று சொல்லமுடியாதே என்றுதான் ஸ்டாலின் அமைதியாக இருக்கிறாராம். இப்படி அறப்போர் இயக்கம் சொல்கிறதே என்று தைரியமாக குற்றம் சாட்டினால் எப்படி ஸ்டாலின். ஏற்கெனவே ராமதாஸ் வம்பு இழுத்துவருகிறார். இப்போது வேலுமணியிடமும் வம்பு தேவைதானா..?