செந்தில் பாலாஜிக்கு செல்லும் இடமெல்லாம் ‘பதாகை’ வரவேற்பு! எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா?

செந்தில்பாலாஜி எம்.எல்ஏ.வாக மீண்டும் வெற்றி அடைந்ததும், பொறாமைப்பட்ட அ.ம.மு.க.வினர் இப்போது ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.


அவர்கள் மட்டுமல்ல, தி.மு.க.வினரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.கட்சி மாறி வந்ததுமே தி.மு.க மாவட்ட பொறுப்பாளராக பதவியில் அமர்ந்துவிட்டார் செந்தில்பாலாஜி. இது தி.மு.க.,வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோன்று அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சீட்டு வாங்கியது மட்டுமின்றி, வெற்றியும் அடைந்துவிட்டார். இதனால் தி.மு.க.வினர் கடும் கடுப்பில் இருந்தார்கள்.

அந்த தேர்தலின் போது, எனக்கு ஓட்டு போட்டால் எல்லோருக்கும் 3 சென்ட் நிலம் இலவசமாகக் கொடுப்பேன் என்று அறிவித்தார். அப்போது அவர், இடைத் தேர்தல்களில் தி.மு.க., முழுமையாக வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடும். அதேபோன்று, மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பித்தான், இலவச திட்டத்தை அறிவித்தார்.

ஆனால் செந்தில்பாலாஜி நினைத்தது நடக்கவில்லை. மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை, மத்தியிலும் காங்கிரஸ் வரவில்லை. அதனால் அவரது திட்டம் அம்போ ஆகிவிட்டது. அதனால் வெற்றி பெற்றதுக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர் போகவில்லை.

அதனால் இப்போது பொதுமக்கள் செந்தில் பாலாஜி மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அது சமீபத்தில் அவர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர் பகுதிக்கு மகேஷ் பொய்யாமொழியுடன் வந்தபோது தெரியவந்தது.

வழிநெடுகிலும் மக்கள் கையில் பதாகை ஏந்தி நின்றனர். அந்தப் பதாகையில், ‘3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி எங்கே? எங்கே எங்களுக்கான 3 சென்ட் நிலம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதெல்லாம் அ.தி.மு.க.வின் வேலை என்று செந்தில்பாலாஜி சொல்லி வருகிறார் என்றாலும், மக்கள் கேட்பது நியாயம்தானே.

சொன்னதை செய்யுங்கள் செந்தில் பாலாஜி, இல்லைன்னா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று தி.மு.க.வினரும் குரல் கொடுக்கிறார்கள். நல்லாயிருக்கே...