2020ல் நிலத்தடி நீர் இருக்காது! பஞ்ச பூமியாகும் சென்னை! உஷார் ரிப்போர்ட்!

வரும் 2020ம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு சென்னையில் கடும் வறட்சி நிலவும் என்ரு எச்சரிக்கை செய்திருக்கிறது நிதி ஆயோக் அறிக்கை. அப்படி என்னதான் சொல்கிறது?


சென்னை மட்டுமல்ல இந்தியாவிலுள்ள 21 நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும். காரணம் கடந்த காலங்களில் இந்த 21 நகரங்களிலும் நிலத்தடி நீர் உயர்வதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நகரங்களில் வாழும் மக்களின் நீர்த்தேவையில் 40 சதவீதம் நிலத்தடி நீரை நம்பித்தான் உள்ளது. நீங்கள் எத்தனை முறை எவ்வளவு தரம் வாய்ந்த மோட்டரை ஆன் செய்தாலும் நிலத்தடியில் நீர் இருந்தால்தானே அது மேலே வரும். இந்த நிலைமை நீடித்தால் இந்த நகரங்களில் வாழும் 600 மில்லியன் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது நிதி ஆயோக்.

மொத்த இந்தியாவும் சரியான பருவமழை இல்லாத காரணத்தால் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. இதில் மனிதர்கள் மட்டுமில்லை, கால்நடைகள், வன விலங்குகள், பறவைகள், பல வருட மரங்கள், செடிகள்,கொடிகள் என அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. ஆனால், அரசிடம் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதுதான் துயரம். இதுகுறித்து நம் ஊடகங்களும் பெரிய அளவில் எதையும் ரிப்போர்ட் செய்யவில்லை. தண்ணீர் பஞ்சத்தால் எத்தனை ஆடு, மாடு, கோழி, பன்றி என வீட்டு விலங்குகளும் பறவைகளும் மாய்ந்தன என்பதற்கு அத்துறை சார்ந்தவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால் இவை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

நிதி ஆயோக் எச்சரித்த பின்பும் நமது மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் என்ன இருக்கின்றன என அரசிடம் கேள்வி கேட்க யாருமே தயாராக இல்லை. (கேட்டால் கொடுத்துவிடப்போகிறார்களா என்ன?)

ஆனால், அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள கி&வி பல்கலைக் கழகத்தில் தமிழகத்தின் பாரம்பரிய நீர்சேமிப்பு முறைகளைத்தான் பாடமாக வைத்துள்ளார்கள். வளர்ந்த நாடான அமெரிக்காவுக்கே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. துரதிஷ்டவசமாக நம் அரசியல்வாதிகள் நம் ஏரிகளையும் குளங்களையும் தூர்த்து வணிக வளாகம் கட்டுவதற்கும் பேருந்து நிலையம் அமைப்பதற்கும்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

2020-ல் வரலாறுகாணத பஞ்சத்தை எதிர்கொள்ள வேறொன்றும் செய்யத் தேவையில்லை. நம் அருகில் இருக்கும் ஏரி, குளங்களை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டாலே போதும். வறட்சியிலிருந்து கொஞ்சமேனும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் நீர்வள- வேளாண் அறிஞர்கள். என்ன செய்யப் போகிறோம்?