திருச்சி கோட்டத்திற்கு உள்பட்ட மேலும் 36 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 ரயில் நிலையங்களில் அதிவேக இலவச WiFi ! விரைவில் கிடைக்கும்!
நாடு முழுவதும் ரயில்வே சேவையை எளிமைப்படுத்தும் வகையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை சேவை வழங்க, ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி ரயில் கோட்டத்திற்கு உள்பட்ட மேலும் 36 ரயில் நிலையங்களில், இலவச வைஃபை சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திருச்சி கோட்டத்தில் உள்ள திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருச்சி கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட 50 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் 36 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திருச்சி கோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில், புதுச்சேரி, வேளாங்கண்ணி, மன்னார்குடி, வைத்தீஸ்வரன் கோயில், திருவெரும்பூர், குத்தாலம், உளுந்துர்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களும் அடங்கும்.
இதன்படி, ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் வைஃபை சேவையை பயணிகள் இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், அதன்பின் சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.