பெண்களை நோக்கிய சிறுவர்களின் ஆபாச - காமப் பார்வை! காரணம் இது தான்!

இன்று நடக்கும் பாலியல் குற்றங்களில் ஏராளமான விடலைப் பையன்கள் தென்படுகிறார்கள். ஏன் இந்த நிலைமை என்பதை பத்திரிகையாளர் வெங்கடேசன் அவரது பார்வையில் எழுதியிருக்கிறார். இதோ, அந்தப் பதிவில் இருந்து சிறு பகுதி.


பெண்ணின் அங்கங்கள் எப்படி இருக்கும் என்று ஆர்வம் சிறுவர்களை ஆட்டிப்படைத்த காலம் இன்டர்நெட் வந்ததும் பிரமோஷன் ஆகிப்போய் விட்டது. நெட்டில் கொட்டிக்கிடக்கும் அப்பட்டமான உறவு காட்சிகள் எளிதாகவே சிறுவர்கள் வசப்பட்டு போய்விட்டன.. அங்கங்களை வெறுமனே பார்க்க மட்டுமே துடித்த மனசு, இப்போது, தொட்டுப்பார்த்து அனுபவித்தால் என்ன என்ற லெவலுக்கு போய்விட்டது.

சிறுவயதில் பாலுணர்ச்சி அலைபாய்வதை ஒரேயடியாக தடுக்க முடியாதோ. அதே போலத்தான் விஞ்ஞான வளர்ச்சியிலிருந்து ஒரேயெடியாக ஒதுங்கிப்போய் விடமுடியாது. ஆனால் கண்டிப்பாக பாலியல் சமாச்சாரங்கள், பாலியல் குற்றங்கள் பின்விளைவுகள், தண்டனைகள், குடும்பத்திற்கு சமூகத்தில் கிடைக்கும் அவமானம் பற்றி விளக்கம் சொல்லி நெறிப்படுத்தலாம்..படுத்தியே ஆகவேண்டும்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜாடைமாடையாக நாசூக்காக இளம் வயது பிள்ளைகளிடம், மகனாக இருந்தாலும் சரி மகளாக இருந்தாலும் சரி பாலியல் தொடர்பான விஷயங்களில் எவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

உன் பிரண்ட்ஸோடு சேர்ந்து திருட்டுத்தனமாய் செல்போனில் பார்க்கும் மேற்படி படங்கள் அத்தனையும் சுத்த ரீல், சாத்தியமே இல்லாதவை. பதினைந்து நிமிடம் ஓடும் வீடியோவை எடுக்க ஒரு வாரம் சூட்டிங் நடத்தி எடிட் பண்ணி பெரிய பராக்கிராமசாலி போல காட்டுவார்கள் என போகிற போக்கில் போர்னோ படங்களை பற்றிய பிம்பங்களை போட்டு உடைத்து விட்டு போகவேண்டும்..

அதைவிட்டு படம் பார்ப்பது தவறு என்று புத்திமதி சொன்னால், அவர்களுக்கு கோபம்தான் வரும் இன்னொரு வகையில் எதை தடுக்கிறோமோ அதைப்பற்றிய ஆர்வமே அவர்களுக்கு மேலோங்கும். பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல வேறு வகையான குற்றங்கள் பற்றியும் அவர்களிடம் நாசூக்காக சொல்ல வேண்டும். ஆண்ட்ராய்ட் செல்போன் காலத்தில். எங்கே என்ன தவறு செய்தாலும் தப்பவே முடியாது. கண்டிப்பாக மாட்டியே தீருவோம் என்பதை அவர்களிடம் உதாரணங்களோடு சொல்லவேண்டும்..

பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் சிறுவர் சிறுமியர் மனதில் தெளிவுகள் பிறக்கும் வகையில், பாடத்திட்டங்களையும் தாண்டி நட்பாக எடுத்துரைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும்விட, பெண் என்பவளுக்கும் ஒரு மனசு இருக்கிறது. அவளுடைய விருப்பம் இல்லாமல், அவள் கண்களைப் பார்ப்பதுகூட தவறு என்று அழுத்தமாக சொல்லித்தர வேண்டும்.

இப்படி சொல்லிவளர்த்தால் குற்றங்கள் முழுமையாக குறைந்துவிடாது, ஆனால், நாகரிகமான எதிர்காலம் உருவாகலாம்.