இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்களை கைது செய்தது ஏன்..? தமிழகத்துக்கு மனிதாபிமானமே இல்லையா..?

இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது, மனிதாபிமானமற்ற செயல் என்று கே.நவாஸ்கனி MP கடுமையாக கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.


இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த 8 பேர் (4 பெண்கள்) உட்பட 11 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது.

ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே இந்தோனேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்தவர்கள், தற்போது மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மற்றும் அனைத்து வெளிநாட்டு விமான சேவையையும் ரத்து செய்ததனால், அவர்கள் இங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர்.

மேலும் ஹோட்டல்கள் உள்ளிட்ட விடுதிகளும் மூடப்பட்டதால் அவர்கள் தங்க இடமின்றி இராமநாதபுரம், பாரதி நகர் மர்க்கஸ் எனும் வழிபாட்டுத்தலத்தில் தங்கி வந்தனர். அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் முறையான தகவல்கள் மாவட்ட காவல்துறையிடம் மர்க்கஸ் நிர்வாகத்தின் சார்பாக தினந்தோறும் சமர்ப்பிக்கப்பட்டது.

நவநீத கிருஷ்ணன் எனும் காவலர் அவர்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முழுமையான தகவல்களை முறைப்படி மர்க்கஸ் நிர்வாகத்தினரிடம் பெற்றுக்கொண்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதிலும் அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகி பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அதிலும் நோய் தொற்று இல்லை என்று உறுதியாகிவிட்டது.

இரு முறை பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என முடிவுகள் வந்த பின்னரும் நோய்த்தொற்றை பரப்பினார்கள் என்று எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை கூறி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு பரப்ப முடியும்? எனவே இது மனிதாபிமானமற்ற செயல் என குற்றம் சாட்டுகிறேன்.

சுற்றுலா விசாவில் வந்து மத பிரச்சாரம் செய்ததாக மற்றொரு பிரிவில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தினரிடமாவது மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்று பொதுமக்கள் யாராவது புகார் அளித்து இருக்கின்றார்களா? அல்லது இவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்களிடம் மதப்பிரச்சாரம் செய்ததற்கு காவல்துறை ஏதேனும் ஆதாரம் வைத்துள்ளதா? எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இவ்வழக்கு எப்படி போடப்பட்டது? மேலும் மற்றொரு வழக்காக ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட பின்பு இவர்கள் ஏதாவது பொது இடத்தில் ஒன்று கூடினார்களா? அல்லது ஊரடங்கு உத்தரவை மீறும் வண்ணம் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? அப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லாதபோது எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்?

அவர்களின் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாதபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய, அவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டிய தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தண்டனை வழங்கப்படாத விசாரணை கைதிகளையே இந்த பேரிடர் காலத்தில் சிறையில் வைக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இருக்கும்பொழுது, எந்தவித முகாந்திரமும் இல்லாதவர்களை சிறையில் அடைத்தது யாரை திருப்தி அடைய செய்திருக்கிறது தமிழக அரசு என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்து இருக்கிறார் நவாஸ்கனி.