ஆ.ராசாவை ஏன் ஸ்டாலின் அடக்கியே வைத்திருக்கிறார்..? ராசா புகழ் பெற்றுவிடுவார் என்று ஸ்டாலினுக்கு பயமா..?

கந்தசஷ்டி விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக எல்லோரும் கம்பு சுற்றிய நேரத்தில் தி.மு.க. பம்மவே செய்தது. ஆனால், நேற்றைய நியூஸ் 7 விவாதத்தில் ஆ.ராசா, கந்தசஷ்டி விவகாரத்தில் பிரித்து மேய்ந்துவிட்டார்.


பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கலைஞர், நேரு, வல்லபாய் படேல், வில்லியம் ஜோன்ஸ், ராஜேந்திர பிரசாத், விபி சிங், மண்டல் கமிஷன், புருஷோத்தம தாஸ் டாண்டன், இட ஒதுக்கீடு வரலாறு, வர்ணாஷ்ரமம், இந்துத்துவ அரசியல், திருக்குறள், சமூக நீதி என்று அத்தனை குறிப்புகளையும் செய்திகளையும் தனது ஒவ்வொரு பதிலிலும் மேற்கோள்களாக ஒரு தேர்ந்த வரலாற்றாளரைப்போல் மிகத்தெளிவாக நிறைத்திருக்கிறார் ராசா.

திராவிட இயக்க கொள்கை விளக்க குரல்களாக நாவலரையும், பேராசிரியரையும் சொல்வார்கள். இன்றைய தேதிக்கு நம்மிடம் இருக்கும் மிக மிக மிக சொற்பமான கொள்கையாளர்களில் முக்கியமான குரல் ராசாவினுடையது. புதிய கல்விகொள்கையினைப் பற்றி குறிப்பிடும்போது இப்படிச் சொல்கிறார். 

“நான் வெளிப்படையா சொல்றேன் சார். எனக்கு வெக்கமில்ல. உண்மைய தான் சொல்றேன். நான் ஒரு பெரியார்வாதி,ஒரு அண்ணாவாதி,ஒரு கலைஞர்வாதி,ஒரு அம்பேத்கர்வாதிங்கிற முறையில. இந்த மூணாவது அஞ்சாவது பத்தாவது தேர்வெல்லாம் வச்சிருந்தீங்கன்னா ராஜா மந்திரி என்ன பார்லிமெண்ட் வாசலக்கூட தொட்டுப் பாத்துருக்க மாட்டான்”. 

இதன் உட்பொருளாக கவனித்தால் அரசியல் எழுச்சியில் சமுதாயம் ஒருவனை அடக்கும்போது அவன் கற்ற கல்வி மட்டுமே முன்னேற்றும் என்பது தெளிவாகப் புரியும். “தகத்தகாயத் தமிழை தாபிப்போம் வாரீர்” என்றொரு பாவேந்தரின் வரி இருக்கிறது. ‘தகத்தாய’ என்றால் ‘ஒளிமிகுந்த’ என்று பொருள். 

ஆ.ராசாவைக் குறிப்பிட்டுச்சொல்லும்போது ‘தகத்தாய சூரியன்’ என்று சொல்வார்கள் கழகத்தினர். திராவிட சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த எத்தனையோ சூரியன்கள் இருந்தாலும் ‘தகத்தாய சூரியன்’ என்று அவரே தனித்துத் தெரிவார். 

தி.மு.க.வை காப்பாற்றும் குரலாக இருக்கும் ஆ.ராசாவை ஏன் இத்தனை காலமாக ஸ்டாலின் மட்டம் தட்டியே வைத்திருக்கிறார் என்பதுதான் புரியவில்லை. அவர் புகழ் பெற்று போட்டிக்கு வந்துவிடுவார் என்று பயப்படுகிறாரா…?