தி.மு.க.வில் இருந்து ஏன் வெளியேறினார் எம்.ஜி.ஆர்.! பதவி ஆசையா அல்லது கருணாநிதியின் சுயநலமா?

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த புரட்சித்தலைவர் மீண்டும் கருணாநிதி முதல்வராவதற்கு பெரும் உதவி செய்தார்.


ஆம், 1971-ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வந்தது. பேரறிஞர் அண்ணா இல்லாத நிலையில், திமுக வெற்றிக்காக புரட்சித்தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் விளைவாக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக மாபெரும் சாதனை படைத்தது.

அப்போது திமுகவின் பொருளாளராக இருந்த புரட்சித்தலைவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் விரும்பினார்கள். ஆனால் சினிமாவில் இருந்து விலகி சுகாதாரத் துறை அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில், அந்தக் கோரிக்கையை புரட்சித்தலைவர் நிராகரித்தார்.

ஏனென்றால் அப்போது அவருக்கு சினிமாதான் முதல் விருப்பமாக இருந்தது. பதவியை அவர் ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை என்பதுதான் உண்மை. 1971-ம் தேர்தலுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சிக்கும் ஆட்சிக்கும் தன்னுடைய தலைமையே காரணம் என்று நினைத்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல்,

அவர்கள் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் என்று அனுசரித்துச் சென்றார். அதனால் திமுகவில் ஊழல் பெருத்துவிட்டது என்று பெருந்தலைவர் காமராஜர் ஊர் ஊராக பரப்புரை செய்தார். அடுத்த கட்டமாக, தன்னுடைய அரசியல் வாரிசாக மு.க.முத்துவை நுழைப்பதில் கலைஞர் கருணாநிதி அதிக ஆர்வம் காட்டினார். மு.க.முத்துவை புரட்சித்தலைவருக்குப் போட்டியாக சினிமாவில் கொண்டுவந்தார். புரட்சித்தலைவர். போலவே வேடமிட்டு நடித்த முத்துவின் பெயரால் தி.மு.க-வில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். பெயரில் ரசிகர் மன்றங்கள் தொடங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, முத்துவின் பெயரில் மன்றங்கள் ஆரம்பிக்கும்படி கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன. மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதைக் கண்டு புரட்சித்தலைவரின் ரசிகர்கள் அதிர்ந்து நின்றார்கள். எம்.ஜி.ஆர். மன்றங்களை முத்து மன்றமாக மாற்றுவதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

இதைக் கண்டு தமிழகமெங்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்கள் ஆத்திரமானார்கள். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு பதவி ஆசை வந்துவிட்டது என்று தி.முக.வினரே பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார்கள். சினிமாவிலும் நடித்துக்கொண்டு, ஆட்சியிலும் இருப்பதற்கு பேராசைப்படுகிறார் என்று சொல்லப்பட்டது.

கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதை அடுத்தே, கேள்வி கேட்கத் தொடங்கினார் புரட்சித்தலைவர். அதனால் தி.மு.க.வில் புரட்சி வெடித்தது.