காங்கிரசுக்கு எதிராக கே.என். நேரு கொதித்து எழுந்தது ஏன்? பரபரப்பு பின்னணி!

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு நேற்று காலை பேசியது தான் இன்றைய அரசியலின் ஹாட் டாபிக்.


தண்ணீர் பிரச்சனையை களைய வலியுறுத்தி திருச்சியில் கே.என்.நேரு நடத்திய போராட்டம் தான் சர்ச்சைகளுக்கு மையமாக அமைந்துவிட்டது. அங்கு தண்ணீர் பிரச்சனை பற்றி பேசாமால் அரசியல் பேசியது தான் தற்போது திமுகவிற்குள் கலகத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக ஒதுக்கியது.

அப்போதே திமுக மாவட்டச் செயலாளர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர். வாக்கு வங்கியே இல்லாத ஒரு கட்சிக்கு எதற்கு இத்தனை தொகுதிகள் என்று தங்களுக்குள் புழுங்கினர்.

பிறகு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் புதுச்சேரியுடன் சேர்த்து காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்கியதை பல மாவட்டச் செயலாளர்களால் ஜீரனித்துக் கொள்ளவே முடியவில்லை. காரணம் எம்பி சீட் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பல மாவட்டச் செயலாளர்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருந்தனர்.

இதே போல் கேஎன் நேருவும் கூட இந்த முறை திருச்சி திமுகவிற்கு தான் என்று கூறி அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இருவரை எம்பியாக்குவதாக கூறி பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடைசியில் திருச்சி தொகுதி காங்கிரசுக்கு சென்றுவிட்டது.

அங்கு போட்டியிட்ட திருநாவுக்கரசர் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு திருநாவுக்கரசர் பேச்சுகள் கேஎன் நேருவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த செல்வாக்கால் தான் தான் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் கூறியதை நேருவை டென்சன் ஆக்கியுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மேயர் பதவி காங்கிரசுக்கு தான் என்கிற ரீதியில் தற்போதே திருநாவுக்கரசர் அக்கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருவதும் நேரு காதிற்கு சென்றுள்ளது. இதனால் தான் நேரு கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். 

இந்த முறை திருச்சி மேயர் பதவியை தனது குடும்பத்தில் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க நேரு முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்கு உலை வைக்கும் வகையில் திருநாவுக்கரசர் பேசிய ஆத்திரத்தால் தான் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டி என்று கூறி அதிர வைத்தார் நேரு. ஆனால் இந்த விவகாரம் ஸ்டாலின் காதுகளுக்கு செல்ல அவர் அப்செட் ஆகியுள்ளார். கூட்டணி விவகாரம் குறித்து எப்படி வெளிப்படையாக பேசலாம் என்று ஸ்டாலின் டென்சன் ஆக உடனடியாக செய்தியாளர்களை கூட்டி விளக்கம் அளித்து தப்பித்துள்ளார் நேரு.