மத்திய பட்ஜெட் ஏன் விவசாய விரோதமானது என்கிறோம்? - விவசாயிகள் சங்கம் சொல்லும் காரணங்கள்!

மத்திய வரவு செலவுத் திட்டமானது விவசாயிகளின் நலனுக்கு எதிராகவே அமைந்துள்ளது; இதைக் கண்டித்து இம்மாதம் 13ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.


நேற்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் வாசகம், ‘விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக ஆக்குவோம்’ என்பதுதான். ஊடக விவாதங்களிலும் இது குறித்தே ஆதரவாகவும் கடும் எதிர்ப்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. விவசாயிகள் சங்கங்களின் தரப்பில் சொல்லும்படியாக கருத்துகள் வெளியாகவில்லை. இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தரப்பில் இந்த பட்ஜெட்டானது விவசாயிகளுக்கு எதிரானது என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூறுவதற்கான காரணங்களை அச்சங்கம் பட்டியலிட்டுள்ளது. அதில் முக்கியமான அம்சங்கள்: 

மத்திய பாஜக அரசு 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் எனக் கூறியுள்ளது. ஆனால், மத்திய அரசின் கொள்கைளால் விவசாயிகளின் விலைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காமல் இருந்துவருகிறது. இதனால், விவசாயத்தில் தொடர்ந்து நட்டமடைந்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடன்காரர்களாக மாறி வருகின்றனர். 

பா.ஜ.க ஆட்சியில் விவசாய தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரை அளித்தபடி விலையை நிர்ணயிக்கவேண்டும், விவசாயிகள் கடனை ஒருமுறை தள்ளுபடி செய்து அவர்களை கடன் வலையிலிருந்து விடுவிக்கவேண்டும். அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் விடுக்கப்பட்ட இக்கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. 

நேர்மாறாக உரமானியம், நீர்ப்பாசனம், கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. உரத்துக்கான மானியத்தை ரூ.77,886 கோடியிலிருந்து ரூ.70,139 கோடியாக குறைத்துள்ளனர். இந்திய உணவுக் கழகம் மற்றும் பொதுவிநியோக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதி ரூ.1,51,000 லட்சம் கோடியிலிருந்து ரூ.75,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்குறைப்பு வேளாண் விளைபொருள்களை அரசாங்கமானது கொள்முதல்செய்வதை கடுமையாக பாதிக்கும். 

உற்பத்திச்செலவை மேலும் உயர்த்தும்வகையில், உணவு மானியத்தையும் குறைத்துவிட்டனர். நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிடுவது, ஒப்பந்தமுறை விவசாயத்தை மாநில அரசுகள் சட்டமாக்க வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தியுள்ளது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் ஏழை விவசாயிகளின் நிலங்களை பெருவிவசாயிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிக்கொள்ள மத்திய பட்ஜெட் கதவைத் திறந்துவிட்டுள்ளது. 

வேலையின்மை அதிகரித்துவரும் நிலையில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட செலவுத் தொகை ரூ.71,000 கோடி. ஆனால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியோ ரூ.61,500 கோடி மட்டுமே. ஒதுக்கீட்டைக் குறைத்து திட்டத்தையே மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டானது, துயருற்றிருக்கும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் விவசாயவிரோத பட்ஜெட்டாகும்.

எனவே, மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள அனைத்து தாலுகாகளிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இம்மாதம் 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

இத்தகவல்களை, அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.