கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்ட ஸ்டாலின், பேராசிரியருக்கு அறிவாலயத்தை கொடுக்க மறுத்தது ஏன்? அதிர்ச்சி தகவல்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு வைக்கப்படாமல் அவரது வீட்டிலேயே வைத்து இறுதி ஊர்வலம் நடத்தி தகனம் செய்துள்ளார்கள்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் மார்ச் 7 நள்ளிரவு 1 மணிக்கு காலமானார். அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை பேராசிரியரின் உடல், கீழ்பாக்கம் நியூ ஆவடி ரோடு, வாட்டர் டேங்க் அருகிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கேயே அனைவரும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு பேராசிரியரின் கீழ்ப்பாக்கம் வீடு பரிச்சயமானது. ஆனால் மாநிலம் முழுவதிலுமுள்ள அடுத்தடுத்த கீழ் நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பேராசிரியரின் இல்லம் எங்கிருக்கிறது என்பதை விசாரித்து அறிந்துகொண்டு வரவேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

நெரிசலில் சிக்கி அஞ்சலி செலுத்திய திமுக தொண்டர்கள், “பேராசிரியர் 43 ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார். அண்ணாவுக்கும், கலைஞருக்கும் மிகவும் வேண்டப்பட்டவர். அவரது உடலை கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் வைத்து பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யாமல் விட்டது ஏன்? அறிவாலயம் என்றால் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும். அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவான இட வசதியும் அறிவாலயத்தில் உள்ளது.

கலைஞர் காலமானபோது அவர் முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர், முதுபெரும் தலைவர் என்ற அடிப்படையில் பொது இடமான ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பேராசிரியருக்கு அந்த வாய்ப்பு இல்லையென்றபோதும் கூட அவர் நித்தம் நித்தம் வந்து சென்ற அறிவாலயத்துக்கு அவரது உடலைக் கொண்டு வந்து அவரை கௌரவித்திருக்கலாமே? ஏன் இதைச் செய்யவில்லை” என்று கேட்கிறார்கள்.

பேராசிரியர் சில மாதங்களாக உடல் நலிவுற்றிருந்தபோது அறிவாலயம் சென்று பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தினம் தினம் கலைஞரோடு அறிவாலயத்தில் கழகப் பணியாற்றிய திமுகவின் மிக மூத்த தலைவருக்கு அவர் மறைந்த பின் அறிவாலயத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

சில மணி நேரங்களாவது அறிவாலயத்தில் வைத்து அவரது இறுதி விருப்பத்தை பூர்த்தி செய்திருக்கலாம். 43 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியருக்கு அறிவாலயம் அல்லாமல் அஞ்சலி செலுத்த சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? இப்படி ஒரு கட்டுரையை பத்திரிகையாளர் ஆரா, தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

இது குறித்து விசாரித்த போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு வாடகைக்கு விடுவதால் அங்கு மரணம் தொடர்பான நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே திமுக தலைமை எடுத்த முடிவாம். அதன் அடிப்படையில் தான் அண்ணா அறிவாலயத்தில் அன்பழகனின் உடலை வைக்க ஸ்டாலின் முயற்சிக்கவில்லை என்கிறார்கள்.