தி.மு.க.வின் வேலூர் வெற்றி செல்லுமா செல்லாதா? ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் இல்லாத குழப்பம் ஸ்டாலினுக்கு மட்டும் ஏன்?

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஜெயித்ததைப் பார்த்து, இது வெற்றியாகத் தெரியவில்லை என்று எதிர்க் கட்சியினர் சொல்லி வருகிறார்கள்.


அதுகூட பரவாயில்லை, சில சில நடுநிலைவாதிகளும் இதே கருத்தை சொல்லி வருகிறார்கள் .. இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் என்றாலும் அது வெற்றிதான் .. அதிபர்முறை தேர்தலில்தான் 50% விழுக்காடு வேண்டுமென்று முதல் இரண்டு இடம் பிடித்தவர்களை மீண்டும் மக்களிடையே வாக்கு கேட்க செய்வார்கள். 

வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் மனபக்குவம் வேண்டும். குறைவான வாக்குகளில் தோற்றவர்களையும் வென்றவர்களை நாடு கண்டிருக்கிறது. சென்ற சட்டமன்ற தேர்தலில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 30 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றபோது யாரும் அதை தோல்வி என்று சொல்லவில்லை.

எம்ஜிஆர் உடல் நலிவுற்று அமெரிக்காவில் இருந்து தேர்தலை சந்தித்தபோது 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் 60க்கு மேற்பட்ட இடங்களில் வென்றார். இதெல்லாம் பலருக்கும் தெரிவதே இல்லை. தமிழிசை ஜெயகுமார் போன்றவர்கள் மைக் கிடைத்தால் எதையாவது உளறவது வாடிக்கையாகிவிட்டது.

உண்மையில், கடந்த தேர்தலைவிட வேலூரில் திமுக பெற்று இருக்கும் வாக்கு விகிதம் கூடுதல் என்பதும், ஏ.சி.சண்முகம் கடந்த தேர்தலில் தனி செல்வாக்கோடு பெற்ற வாக்குகள் எண்ணிக்கையோடு அதிமுக வாக்குகளை சேர்த்தால் சில லட்சம் வித்தியாசங்களில் வென்றிருக்கவேண்டும். அதுவும் நடக்கவில்லை.

ஆகவே, தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிப்பவர்கள், கடந்தகால புள்ளி விபரங்களைத் தெரிந்துகொண்டு பேசவேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்கவேண்டும் என்று உடன்பிறப்பு ஒருவர் கொந்தளித்து இருக்கிறார்.