ஒரே நாளில் நடுத் தெருவுக்கு வந்த காவேரி டிவி ஊழியர்கள்! அதிர வைக்கும் காரணம்!

திடுமென பலரையும் வேலையில் இருந்து நிறுத்திய காவேரி தொலைக்காட்சி நிர்வாகம் இன்னமும் ஜூலை மாத சம்பளம் தரவில்லை என்று முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்களாம். இதுகுறித்து ஜெயபாதுரி எழுதியிருக்கும் பதிவு இது.


காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் திரு.இளங்கோவனை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை கொடுத்து எழுத்துப்பூர்வமாக பதிலை கேட்க வந்தோம். நான்கு பேரை அழைத்து பேசிய அவர், ‘சம்பளத்தை எந்த தேதியில் தர முடியும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது.

உங்கள் கோரிக்கையெல்லாம் என்னால் வாங்க முடியாது. நீங்கள் சொல்வதை, கேட்பதையெல்லாம் செய்ய முடியாது என கூறினார். அதற்கு நாங்கள் "ஜூலை மாத ஊதிய தேதி மற்றும் எங்கள் கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தால்தான் இங்கிருந்து செல்வோம்" என கூறினோம். 

அதற்கு அவர் "சரி எனது அலுவலக காவலாளிக்கு ரூ. 6 ஆயிரம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறேன். அந்த பணம் மிச்சமாகட்டும், நீங்கள் காவலுக்கு இருங்கள். எத்தனை நாள் ஆனாலும் சம்பளம் எப்போது கொடுக்க முடியும் என்பது எனக்கே தெரியாது.

நீங்கள் இங்கு காத்திருப்பது வீண்." என கூறினார். நாங்களும் சரி என கூறிவிட்டு அவர் சொன்னதைப் போல அலுவலக வாசலில் அமர்ந்து காவலாளி வேலை பார்த்தோம். அப்போது வெளியே வந்த நிர்வாக இயக்குநர் பெண்கள் என்றும் பாராமல் தள்ளிவிட்டு வெளியேறினார்.

எங்களது ஜூலை மாத ஊதியமும், மற்ற கோரிக்கைகளை ஏற்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என கூறி, தற்போது அண்ணாநகர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்...

அடுத்த வாரம் அடுத்த வாரம் என நாட்களை கடத்திக் கொண்டே இருப்பதால் இனியும் காத்திருப்பதில் நம்பிக்கையில்லை. எனவே மீதமுள்ள காவேரி ஊழியர்களும் எங்கள் போராட்டத்தில் பங்கேற்குமாறும், அனைத்து பத்திரிகையாளர்களும் காவேரி தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறார்கள்.