ரஜினியை அ.தி.மு.க. ஏன் கண்டிக்கிறது? பா.ஜ.க.வை எதிர்க்கிறதா எடப்பாடி அரசு?

முதன்முறையாக ரஜினிக்கு எதிராக அமைச்சர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பெரியாரை தொட்டால் நாங்கள் விட மாட்டோம் என்று கோபமாகிறார்கள். ரஜினியை அ.தி.மு.க. ஏன் கண்டிக்கிறது என்று பார்க்கலாமா?


பி.ஜே.பி.யிடமிருந்து கொஞ்சம் விலகியிருக்க அ.தி.மு.க. முயல்கிறது. தனது கழுத்தில் கட்டி விடப்பட்ட கல்லாக பா.ஜ.க. இருப்பதை அந்தக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் உணர்ந்தது. தவிர ஓரளவு ஆட்சி நிலை பெற்று, முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஒருவிதமான லவ் ஹேட் உறவை அந்தக் கட்சிகள் கொண்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் தங்களை கைவிட்ட அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கும் ரஜினியை பயன்படுத்தலாம். திட்டியது பெரியாரை என்றாலும் சிக்னல் அ.தி.மு.க.வுக்கு போலிருக்கிறது. இன்னொரு கூட்டணி சாத்தியம் என்ற பயத்தை அதிமுகவுக்குக் கொடுக்க பிஜேபி விரும்பியிருக்கலாம்.

அ.தி.மு.க. ஒன்றும் பெரியாருக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் கட்சி அல்ல. அதே நேரம் தன் மீது ஜெயேந்திரர் போன்றவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை நிறுவ முயன்றபோது அக்கட்சி குரூரமாகத் தண்டித்திருக்கிறது. இடைநிலைச் சாதிகளைத் தாண்டி பிராமணர்களால் கட்சியின் தலைமையை நெருங்கவே முடிந்ததில்லை.

பிராமணர்களையும், திமுக பின்னால் திரண்ட நகர்ப்புற உயர்சாதிகளையும் தோற்கடித்து பெற்ற ஆட்சியை அந்தக் கட்சி அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடாது. தவிர தனது ஆதரவுத் தளமான உதிரி பாட்டாளிவர்க்கத்திடம் செல்வாக்குப் பெற்றுள்ள (ஒருவேளை செல்வாக்குப் பெற்றிருந்த) ரஜினியை அதிமுக எப்போதும் வெறுத்தே வந்துள்ளது.

ரஜினி காந்துக்குக் கண்டனம் தெரிவிப்பதன் மூலம் ஓபிஎஸ்ஸும், ஜெயகுமாரும் குருமூர்த்தியையும் பிஜேபியையும் எச்சரிக்கிறார்கள். பிஜேபிக்கு தமிழகத்தில் அதற்குரிய இடத்தைக் காட்டுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.