யாருடையது இந்த இந்து ரக்ஷா தளம்? எப்படி அடிதடிக்கு ஆட்களைத் திரட்டினார்கள்!

டெல்லி கல்லூரியில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஓர் அங்கமான ஏ.பி.வி.பி.தான் காரணம் என்று செய்தி பரவியது.


ஆனால், இப்போது இந்தத் தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, ஏற்கனவே 2014ம் ஆண்டு காஷ்மீருக்கு எதிராக பேசியதற்காக ஆம் ஆத்மி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

பல்கலைக்கழக தாக்குதல் குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி, ‘தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக செயல்பட்டதால் இந்த தாக்குதலை நடத்தினோம்‘ என்றும் தேச விரோத நடவடிக்கைகள் எந்த பல்கலைக் கழகத்தில் நடந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என பிங்கி சவுத்​ரி எச்சரித்துள்ளார். 

ஆனால், அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். கேட்டுக்கொண்டதன் பேரில் பழியை தங்கள் மீது ஏற்றுக்கொண்டுள்ளது என்று இடதுசாரிகள் குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையில் ஏ.பி.வி.பி. அமைப்புதான் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் ஆட்களைத் திரட்டியதாக தகவல் வெளியாகி வருகிறது. 

பல்வேறு வாட்ஸ் ஆப் ஸ்க்ரீன் ஷாட்கள் இப்போது பொதுவெளியில் கிடைக்கிறது. அதில், "ஜே.என்.யுவுக்குள் எப்படி செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும்?" போன்ற பல விஷயங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த குரூப்பின் பெயர் 'இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை', 'ஏபிவிபி முராதாபாத்', 'ஏபிவிபி ஜிந்தாபாத்', 'இடதுசாரிகள் சரிந்துவிட்டனர்' என்று அடிக்கடி மாறுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எப்படியாயினும் இது திட்டமிட்ட வன்முறை என்பது தெளிவாகியுள்ளது. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.