ராமதாஸுக்கு யார் தீர்மானம் எழுதிக் கொடுத்தது? கிண்டலடிக்கும் அரசியல் பார்வையாளர்கள்!

புத்தாண்டையொட்டி பா.ம.க. நடத்திய பொதுக்குழுவில் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். அதில் முதல் தீர்மானமான இரட்டைக் குடியுரிமை குறித்து அரசியல் பார்வையாளர்கள் பல்வேறு சந்தேகம் எழுப்புகிறார்கள்.


எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்டு ராமதாஸும் அப்படியே ஈயடிச்சான் காப்பி போன்று, இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாமா என்று கேள்வி கேட்கிறார்கள். ஏனென்றால், இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்பது சாத்தியமில்லை என்பதுதான் அவர்களுடைய வாதம்.

இந்திய அரசிடம் இந்தியக் குடியுரிமையை மட்டுமே கோர முடியும். அதன்படி ஒருவர் இந்தியர் ஆகிறார். இந்தியன் என்பது ஒற்றைக் குடியுரிமைதானே? அது என்ன இரட்டைக் குடியுரிமை கேட்கிறார்? இந்தியாவால் எப்படி இரட்டைக் குடியுரிமையை அளிக்க முடியும்!

ஓருவேளை இலங்கை குடியுரிமைப் பற்றிப் பேசுகிறார் என்றால் அதை எப்படி இந்தியாவிடம் கோர முடியும்? அதனை இலங்கையிடம்தானே கேட்க வேண்டும். ஒரு அயல் நாட்டு குடியுரிமை பிரச்னைக்குள் எப்படி ஒரு கட்சியால் நுழைய முடியும்?

அதேபோன்று, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டு, தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு போன்றவைகளுக்கு தடை கேட்கிறார். எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்ததுதானே, ஒன்று ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும்.

இதைவிட்டு ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று சொன்னால் எப்படி? முரண்பாடுகளின் மொத்த உருவமே ராமதாஸ்தானா?