யார் இந்த அஜித்பவார்..? துரோகியா அல்லது அரசியல் ஞானியா? மகாராஷ்டிரா மெகா குழப்பம்!

எந்த ஒரு நேரத்திலும் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் முழுமையான ஆதரவு அளிக்கும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஒரே இரவில் ஒட்டுமொத்த நிலவரமும் மாறிவிட்டது.


ஆம், இன்று அதிகாலை ராஜ்பவனில் நடந்த விழாவில், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவருமான அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

பா.ஜ.க.வுக்கு அஜித்பவார் அளித்த ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்புவிடுத்து பட்னாவிஸ்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அஜித்பவார் முடிவுக்கு சரத்பவார் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்பதாலே, அவருக்குத் தெரியாமல் பேச்சுவார்த்தை நடந்து வந்திருக்கிறது.

ஆனால், இந்த துரோகத்தை எதிர்பாராத சரத்பவார் அதிர்ந்துவிட்டார். ஆனால் உடைந்துபோகவில்லை. உடனடியாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மீடியாவை சந்தித்தார். ‘‘தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்காது. அஜித் பவாருக்குப் பின்னே 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் இருக்கலாம். ஆனால், அவர்களும் விரைவில் எங்கள் கட்சிக்குத் திரும்பிவிடுவார்கள் அல்லது அவர்களது பதவி கட்சித் தாவல் படி பறிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ‘‘சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஆக்குவதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போட்ட கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தி, அஜித் பவார் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் ஆளுநர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சி மாற்றம் செய்துள்ளனர். அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை’’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

‘‘சிவசேனாவைப் பழிவாங்க வேண்டும் என்பதற்கு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி விரைவில் வரும். சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைத்து, உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார்’’ என்று உறுதி அளித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போதுதான் அஜித்பவார் துரோகியா அல்லது அரசியல் சாணக்கியரா என்பது தெரியவரும்.