கே.சி. பழனிசாமி கைதுக்குக் காரணம் யார் என்று தெரியுமா?

எடப்பாடியை தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார் முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி. அப்போதே அவர் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டதாக பேசப்பட்டது. ஆனால், அவரை எடப்பாடி சேர்க்கவும் இல்லை, அவர் சேரவும் இல்லை. இந்த நிலையில், திடீரென வீடு புகுந்து அவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காரணம், அமைச்சர் வேலுமணி என்று சொல்லப்படுகிறது.


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மக்களவையில் பா.ஜ.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. செயல்படும் என்ற சொன்னதாலே அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டவர் கே.சி.பழனிசாமி. இவர்தான் ஜெயலலிதாவின் பொதுச்செயலாளர் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.  

அ.தி.மு.க.வில் இருக்கிறாரா இல்லையா என்று குழப்பமாக தொண்டர்களுக்கு இருந்த நிலையில், அதிகாலையில் அவரது வீட்டுக்குள் நுழைந்து கே.சி. பழனிசாமியை போலீசார் இன்று கைது செய்தனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க. கட்சியைப் பயன்படுத்துவதாகவும், கட்சியின் சின்னத்தை, லெட்டர் பேடு பயன்படுத்துவதாகவும், அதிமுக பேரில் போலி இணையதளம் நடத்துவதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சூலூர் முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் அவர்மீது

417 - ஏமாற்றுதல்

418 - நம்பியவர்களை ஏமாற்றுதல்

419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்

464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல்

465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல்

468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல்

479 - சொத்து குறீயட்டை தவறாக பயன்படுத்துதல்

481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல்

482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கு தண்டணை

485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல்

மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனை கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, சமீபத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இவருக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்துதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.