மேஜிக் மை 99 தேர்வர்கள் கைது எப்போது..? உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார்..?

குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது. ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதினால் வாழ்க்கை பிரகாசமாகிவிடும் என்று தமிழக மக்கள் இன்னமும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆப்பு வைத்திருக்கிறது இந்த முறைகேடு.


மேஜிக் மையால் எழுதியவர்கள், அதன்பிறகு அவர்களுக்கு சரியான விடை எழுதியவர்கள், அந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பலரையும், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தாசில்தார்களையும், பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த நிர்வாகியையும் சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்திருக்கின்றனர். 

இப்போது 99 தேர்வர்களும் ஆயுட் காலம் முழுவதும் தேர்வு எழுத முடியாது என்று கூறியிருப்பதை, அவர்களை தப்பிக்கவைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டால் மட்டுமே சரியாக இருக்கும். இத்தனை பெரிய தவறு செய்தவர்களை எப்படி வெளியே விடலாம் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

இத்தனை பெரிய தவறுக்கு உடந்தையாக இருந்த டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி யார்? என்பதுதான் அத்தனை பேரின் கேள்வியாக இருக்கிறது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர்தான் மூளையாக கருதப்படுகிறார். அவரை பிடித்தவுடன் இந்த கேஸ் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. 

99 பேரிடமும் 15 லட்சம் பேரம் பேசப்பட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு பரீட்சை எழுத அனுமதித்து இருக்கிறார்கள். இந்த முறைகேடு இந்தப் பரீட்சையில்தான் நடைபெற்றதா அல்லது இதற்கு முன்னரே பல்வேறு தேர்வுகளில் நடைபெற்றதா என்பதை விசாரித்தால்தான் நீதி கிடைக்கும். செய்யுமா அரசு.