மறக்கப்பட வேண்டியதை ரஜினி ஏன் பேசினார்? 1971ம் ஆண்டு ரஜினி எங்கே இருந்தார்?

ரஜினிகாந்த் எதை பேசினாலும், அதை விவாதமாக்கி எக்கச்சக்க பிரச்னையாக்குவதற்கு என்றே மீடியாக்கள் தயாராக உள்ளன.


இந்த நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்ன விவகாரமும் பல்வேறு பிரச்னைகளைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால், முதலில் ஒன்றும் பின்னர் வேறு ஒன்றும் பேசுவது ரஜினியின் வழக்கம்தான். 

பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறும் ரஜினி, நாளையோ நாளை மறுநாளோ மன்னிப்புக் கேட்கலாம். அவருக்கு என்ன உத்தரவு வருகிறதோ அதைத்தானே அவர் பேசப் போகிறார்.

1971-ல் நடந்த சம்பவத்தை 'பத்திரிகைகளை பார்த்து தெரிந்துகொண்டேன்' என்று சொல்லும் ரஜினி அந்த காலகட்டத்தில் சென்னைக்கு வரவில்லை. 1973ல் தான் சென்னை திரைப்பட கல்லூரியில் சேர வந்துள்ளார். சினிமா, சென்னை என வாழ்க்கை தெளிவற்று இருந்தபோதே இவர் பெரியார் குறித்த செய்திகளைப் படித்து நினைவில் வைத்திருந்தாரா?

இந்த செய்தியை மேடையில் சொல்லுங்கள் என ரஜினிக்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்தவர்களின் நோக்கம் மிகச் சரியாகப்போய்க்கொண்டுள்ளது. திராவிட கழகத்தை எதிர்த்தால், தி.மு.க.வை எதிர்த்து பேசினால் சட்டமன்றத்துக்கு செல்வதற்கான தகுதி கிடைத்துவிடும் என அவரை வைத்து கணக்குப் போடுகிறவர்கள், திட்டம் தீட்டுகிறார்கள்.

பா.ஜ.க.வின் திட்டத்துக்கு ரஜினி தெளிவாக பழியாகிவிட்டார். அவர் சுட்டிக்காட்டிய பத்திரிகையும் உண்மையில்லை. ஆதாரத்தை காட்ட முடியாத ரஜினி குறிப்பாக மறக்கவேண்டிய விஷயத்தை ஏன் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். 

குழப்பத்தின் பெயர்தான் ரஜினிகாந்தா..?