ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எங்கே போய் தேர்வு எழுதுவது? கல்வித் துறையில் கடும் குழப்பம்!

தேசிய கல்வி என்ற குலதர்மக் கல்வி திட்டத்தை மத்திய பி.ஜே.பி. ஆட்சி அறிவித்தது.. உடனே அதனை அமுல்படுத்தத் துடித்தது அ.தி.மு.க. அரசு.


அதனால் அவசர அவசரமாக 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகளுக்கும் அரசுப் பொதுத் தேர்வு என்று அறிவித்தது. பின்னார், அத்தகைய தேர்வு இல்லை என்று சொன்ன அமைச்சரே பிறகு ‘பிளேட்டை’த் திருப்பிப் போட்டார்.

இந்த நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளில் எழுதக் கூடாதாம். ஒரு கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு பள்ளிகளில்தான் தேர்வுகளை நடத்தவேண்டுமாம். இது குறித்து கடுமையான ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார் திராவிடர் கழகம் வீரமணி.

‘நீட்’ தேர்வு எழுத வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம் உண்டாக்கியது பி.ஜே.பி. அரசு என்றால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டுகிறது பி.ஜே.பி.யின் ‘பி’ டீமான அ.தி.மு.க. அரசு.

நடைமுறையில் இதில் எவ்வளவு சிரமங்கள் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியாதா? ஏழை, எளிய பெற்றோர்கள், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் உலை கொதிக்கும் என்ற நிலையில் உள்ள பெற்றோர்கள், தேர்வு நடத்தும் அத்தனை நாள்களிலும் வேலைக்குச் செல்ல முடியாமல், பிள்ளைகளை அழைத்துச் செல்லுவது, தேர்வு முடிந்தவுடன் அழைத்துக் கொண்டு வருவது என்ற அல்லலை ஈவு இரக்கத்துடன், மனிதாபிமானத்துடன் தமிழ்நாடு அரசின் கல்வித் துறை நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இதுதான் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் - ஆட்சியின் செயல்பாடா? ‘‘நீ படித்தது போதும், என்னோடு கூலி வேலைக்கு வா’’ என்று பெற்றோர்கள் சொல்லவேண்டும் என்று அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறதா? இதுதான் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் - ஆட்சியின் செயல்பாடா? 

கல்வி வளர்ச்சித் திசையில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கால்களை முடமாக்கத்தான் ‘நீட்’ என்றும், புதிய கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் கண்ணிவெடிகள் வைக்கப்படுகின்றன.

இதனையெல்லாம் புரிந்துகொள்ளும் பொறுப்புணர்வு அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லவே இல்லையா? அன்றைக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து கவிழ்ந்து போனார். அதற்குப்பின் எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கொண்டு வந்து 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மக்கள் பாடம் கற்பிப்பார்கள் -என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் கி.வீரமணி.