விதவிதமான புடவைகள்! 25 வாட்ஸ் ஆப் குரூப்! மாதம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் சண்முகப்பிரியா!

வாட்ஸ்ஆப் மூலம் புடவை வியாபாரத்தில் மாதம் 25 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண் ஒருவர் பெண்ணாக பிறந்தால் சமூகம் விதித்து வைத்திருக்கும் எல்லைக்குள்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.


சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் வாட்ஸ்அப் மூலம் புடவைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.  முதுநிலை சமூகவியல் படித்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வந்த சண்முகப்பிரியா மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார்.

கணவரும் டெல்லியில் பணிபுரிந்து வந்த நிலையில் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை மோசம் அடைந்ததால் வேறு வழியின்றி தனது எச்.ஆர். பணியை ராஜினாமா செய்தார் சண்முகப்பிரியா. கணவரும் அருகில் இல்லாமல் குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லாமல் தனிமையில் இருந்த சண்முகப்பிரியா மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதை அடுத்துதான் வாட்ஸ்ஆப் மூலம் புடவை வியாபாரம் செய்ய முடிவு எடுத்து தற்போது 25 குரூப் மூலம் தான் வியாபாரம் செய்யும் புடவைகளை விளம்பரப்படுத்தி சம்பாதித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த தொழிலில் உள்ள பிரச்சனைகள் பற்றி தெரியாததல் மிகுந்த அவதிக்குள்ளான சண்முகபிரியா, முதலில் குறைந்த லாபத்தில் துணி விற்றுவந்தார்.

சில சமயம் வாடிக்கையாளர்கள் துணி வாங்காமல் தேங்கியதால் சில சறுக்கலையும் சந்தித்துள்ளார். பின்னர் வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்களுக்கு தான் வைத்திருக்கும் டிசைன்களை படம்பிடித்து அனுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் ஆர்டர் செய்ய கொரியர் மூலம் துணி அனுப்பி வியாபாரத்தை பெருக்கினார்.

நண்பர்களும் அவரவர் நண்பர்களுக்கு இவரது டிசைன்களை பார்வேர்டு செய்ய தற்போது ஆர்டர் போதுமான அளவுக்கு வருகிறது. தற்போது மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் சண்முகப்பிரியா 3000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.