செப்டம்பர் 20ல் என்ன நடக்கும்? திக் திக் மனநிலையில் காத்திருக்கும் தொழிலதிபர்கள்!

பொருளாதார மந்தத்தால் அவஸ்தைப்பட்டு வரும் தொழில் துறையினர் இப்போது எதிர்பார்க்கும் ஒரே விஷயம் செப்டம்பர் 20 கூட்டத்தைத்தான். ஆம், அன்றுதான் ஜிஎஸ்டி குழுவின் 37வது கூட்டம் கோவாவில் நடைபெறுகிறது.


பொருளாதார மந்தம், ஒட்டு மொத்த வளர்ச்சி சரிவு, ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் என பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில் நடைபெறுவதால், வழக்கத்தை விட இந்த ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதற்குக் காரணம் ஜிஎஸ்டி வரிச் சுமை மற்றும் அதன் நடைமுறையில் உள்ள தவறான அணுகுமுறையே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், வரும் 20ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் 28 % ஆக இருக்கும் சில பொருட்கள் மற்றும் வாகனங்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோன்று சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி வசூல் மற்றும் திரும்பப் பெறும் முறையில் சில மாற்றங்களைச் செய்யவும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்களின் நிதியமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால், மாநில நிதியமைச்சர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கருதப்பட்டது.

தொழில்துறையை நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்திருந்ததன் அடிப்படையில், இத்தகைய எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று பா.ஜ.க. வட்டாரம் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.